அரையிறுதிப் போட்டிக்களுக்குத் தெரிவாகிய யுனிச்செலா, டிமோ, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் கிரெடிட்

328
Mercantile Cricket QF Roundup

24ஆவது சிங்கர் MCA அரையிறுதி சுற்றுப்போட்டிக்கான தகுதிகாண் கிரிக்கெட் போட்டிகளில் மாஸ் யுனிச்செலா, டிமோ, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் கிரெடிட் ஆகிய அணிகள் காலிறுதிப் போட்டிகளில் வென்று அரையிறுதில் தமக்கான இடத்தைப் பதிவு செய்து கொண்டன.

மாஸ் யுனிச்செலா எதிர் மாஸ் எக்டிவ் அணி

அண்மையில், லீக் போட்டிகளில் சம்பியனாக மகுடம் சூடிக்கொண்ட மாஸ் யுனிச்செலா மாஸ் எக்டிவ் அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் எக்டிவ் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதன்படி களம் இறங்கிய மாஸ் எக்டிவ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தில்ஷான் முனவீர அரைச் சதம் விளாசிய அதே நேரம் அணித்தலைவர் ஜெஹான் முபாரக் தனது அணி சார்பாக 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். வேகப்பந்து வீச்சாளர்களான லஹிறு ஜெயரட்ன மற்றும் பர்வீஸ் மஹ்ரூப் தலா 3 விக்கெட்டுகளை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய மாஸ் யுனிச்செலா அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 72 பந்துகளில் 96 ஓட்டங்களை விளாச இலகு வெற்றிக்கு வழி வகுத்தார். அத்துடன் முன்னாள் இலங்கை தேசிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான T.M தில்ஷான் 28 ஓட்டங்களையும், திலக்க்ஷ சுமணசிறி 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற, மாஸ் யுனிச்செலா அணி 31ஆவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம் :

மாஸ் எக்டிவ் – 201/9 (50)

தில்ஷான் முனவீர 55, ஜெயான் முபாரக் 44*, T.M சம்பத் 26, சசிதர சேரசிங்ஹ 20, லஹிறு ஜெயரத்ன 3/37, பர்வீஸ் மஹ்ரூப் 3/47

மாஸ் யுனிச்செலா – 204/3 (30.3)

தனுஷ்க குணதிலக்க 96, மஹேல உடவத்த 37, திலக்க்ஷ சுமணசிறி 28*, T.M தில்ஷான் 20*


ஜோன் கீல்ஸ் எதிர் ஹட்டன் நெஷனல் வங்கி

மொறட்டுவ, டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற இந்த காலிறுதிப்போட்டியில் மனோஜ் சரத்சந்திர மற்றும் ஜனக குணரத்ன ஆகியோர் விளாசிய சதங்களால் ஜோன் கீல்ஸ் அணி, ஹட்டன் நெஷனல் வங்கி அணியை 155 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

5ஆவது விக்கெட்டுக்காக அபாரமாக விளையாடிய வலதுகை துடுப்பாட்ட வீரர்களான சரத்சந்திர மற்றும் குணரத்ன 169 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதோடு, ஜோன் கீல்ஸ் அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள பங்களிப்பு செய்தார்கள். சரத்சந்திர, 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 121 பந்துகளுக்கு 133 ஓட்டங்களை விளாசிய அதே நேரம், குணரத்ன 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 89 பந்துகளுக்கு 123 ஓட்டங்களை விளாசி வாணவேடிக்கை காட்டினர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய, ஹட்டன் நெஷனல் வங்கி 42.5 ஓவர்களில் வெறும் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னாள் வெஸ்லி கல்லூரி அணித்தலைவர் சச்சின் ஜயவர்தன மாத்திரமே அதி கூடிய ஓட்டமாக 67 ஓட்டங்களை ஹட்டன் நெஷனல் வங்கிகாக பதிவு செய்த அதே நேரம், ஜோன் கீல்ஸ் அணி சார்பாக விகும் பண்டார மற்றும் மதுஷான் ரவிசந்திரகுமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம் :

ஜோன் கீல்ஸ் – 358/9 (50)

மனோஜ் சரத்சந்திர 133, ஜனக குணரத்ன 123, சந்துல வீரரத்ன 2/79, சஜிவ வீரகோன் 2/69, மதவ வருனப்புர  2/55, சச்சின் ஜயவர்தன 2/56

ஹட்டன் நெஷனல் வங்கி – 203 (42.5) 

சச்சின் ஜயவர்தன 67, சஜிவ வீரகோன் 27, விகும் பண்டார 3/34, மதுஷான் ரவிசந்திரகுமார் 3/21, ஷானுக துலாஜ் 2/25


கொமர்ஷல் கிரெடிட் எதிர் டெக்ஸ்சர்ட் ஜேர்ஸி

கொழும்பு, NCC மைதனத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த சதுரங்க டி சில்வா காலிறுதிப்போட்டியில் டெக்ஸ்சர்ட் ஜேர்ஸி அணியை 35 ஓட்டங்களால் தோல்வியுறச் செய்து கொமர்ஷல் கிரெடிட் அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தினார்.

229 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த கொமர்ஷல் கிரெடிட் அணிக்காக இடதுகை துடுப்பாட்ட வீரரான டி சில்வா, அதிகூடிய ஓட்டங்களாக 60 ஓட்டங்களைப் பதிவு செய்தார். கொமர்ஷல் கிரெடிட் அணியின் துடுப்பாட்ட வீரர்களை சவாலுக்கு உட்படுத்திய டெக்ஸ்சர்ட் ஜேர்ஸி அணித்தலைவர் மிலிந்த சிறிவர்தன மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண்டேர்சி தலா முன்று விக்கெட்டுகளை தங்களிடையே பகிர்ந்து கொண்டனர்.
வெற்றிக்காக 230 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய  டெக்ஸ்சர்ட் ஜேர்ஸி அணி, இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டி சில்வா தனது மாயஜால பந்து வீச்சில் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்த, டெக்ஸ்சர்ட் ஜேர்ஸி அணி 35 ஓட்டங்களால் தோல்வியுற்றது. அதே நேரம் அதிரடியாக துடுப்பாடிய மிலிந்த சிறிவர்தன 79 ஓட்டங்களைப் பெற்ற அதே வேளை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டிலான் ஜயலத் 46 ஓட்டங்களை டெக்ஸ்சர்ட் ஜேர்ஸி அணிக்காக விளாசினர்.

போட்டியின் சுருக்கம் :

கொமர்ஷல் கிரெடிட் – 229 (46.5)

சதுரங்க டி சில்வா 66, சுராஜ் ரன்திவ் 28, இமேஷ் உதயங்க 23, உபுல் தரங்க 20, மிலிந்த சிறிவர்தன 3/51, ஜெப்ரி வண்டேர்சி 3/54

டெக்ஸ்சர்ட் ஜேர்சி – 194 (36.4)

மிலிந்த சிறிவர்தன 79, டிலான் ஜயலத் 46, சதுரங்க டி சில்வா 5/36
சம்பத் வங்கி எதிர் டிமோ

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதிப்போட்டியில், வலிமைமிக்க சம்பத் வங்கி அணியை 6 விக்கெட்டுகளால் டிமோ அணி வெற்றி கொண்டது.
துடுப்பாடுவதற்காக முதலில் களமிறங்கிய சம்பத் வங்கி அணி 32.4 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது. டிமோ அணி சார்பாக அபாரமாகப் பந்து வீசிய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் புலின தரங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம் :

சம்பத் வங்கி – 149 (32.4)

கௌஷால் சில்வா 34, தசுன் சானக்க 32, புலின தரங்க 3/35, நிசல தாரக்க 2/47

டிமோ  – 152/4 (17.2)

நிபுன் கருணாநாயக்க 68, லசித் அபேரத்ன 44, கசுன் ராஜித 3/40


அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணிகள்

மாஸ் யுனிச்செலா எதிர் டிமோ – ஒக்டோபர், 15ஆம் திகதி, NCC விளையாட்டு மைதானம்

கொமர்ஷல் கிரெடிட் எதிர் ஜோன் கீல்ஸ் – ஒக்டோபர், 15ஆம் திகதி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானம்