மீண்டும் பந்துவீச்சில் பிரகாசித்த தீசன் விதுசன்!

1211
Theesan Vithushan

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட போட்டித்தொடரில் யாழ். வீரர் தீசன் விதுசன் மீண்டும் ஒருமுறை சிறந்த பந்துவீச்சு பிரகாசிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று போட்டிகளில் மிகச்சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த விதுசன், நேற்று (13) நடைபெற்றுமுடிந்த கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

>> கொக்குவில் இந்துக் கல்லூரியை வீழ்த்திய ஸ்கந்தவரோதய கல்லூரி

மூவர்ஸ் அணிக்காக விளையாடிவரும் தீசன் விதுசன் முதன்மை பந்துவீச்சாளர்களில் ஒருவராக இணைந்து பந்துவீசிவருகின்றார். முதல் போட்டியிலிருந்து தன்னுடைய சுழல் பந்துவீச்சின் ஊடாக அனைவரதும் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அணியில் தனக்கு கிடைக்கும் பங்களிப்பை சரியாக பயன்படுத்திவரும் இவர், முதல் இன்னிங்ஸில் 23 ஓவர்கள் பந்துவீசி 76 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 7 ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

இவர் ஒட்டுமொத்தமாக மூவர்ஸ் கழகத்துக்காக 4 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நேற்றைய போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி 241/10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மூவர்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 271/10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் கொழும்பு கிரிக்கெட் கழக அணி 7 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற, ஆட்டநேரம் நிறைவுக்கு வந்தது. எனவே, இந்தப்போட்டி சமனிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<