துயரத்தில் உள்ள இலங்கை மக்களுக்கு கரம் நீட்டிய மகீஷ் தீக்ஷன

6125

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான மகீஷ் தீக்ஷன ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.

பிரிஸ்பேன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட கவாஜா

இலங்கை தற்போது மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இலங்கையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு உருவாகியுள்ளதோடு அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறையும் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் தான் இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆடியதன் மூலம் கிடைத்த வருமானத்தில், ஒரு தொகுதி பணத்தினை மருந்துப் பொருட்கள் வாங்குவதற்காக செலவிட்டுள்ள தீக்ஷன அந்த மருந்துப் பொருட்களை சிறுவர்களுக்கான பிரத்தியேக வைத்தியசாலையான கொழும்பு பொரளை லேடி றிஜ்வே வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்.

தான் வழங்கிய நன்கொடை தொடர்பில் News 9 செய்தித்தளத்திற்கு வழங்கியிருந்த  செவ்வியில் மகீஷ் தீக்ஷன, இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் தனது தாயக அணிக்கு உதவி வழங்கும் செயல்பாட்டினை தான் ஆசீர்வாதமாக கருதுவதாக கூறியிருக்கின்றார்.

இந்த ஆண்டு IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக இந்திய நாணயப்படி 70 இலட்ச ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி சுமார் 3.2 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மகீஷ் தீக்ஷன, தனது அறிமுக IPL பருவத்தில் 9 போட்டிகளில் ஆடி 12 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

அத்துடன் அண்மையில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் நடைபெற்ற ஒருநாள் மற்றும் T20I தொடர்களிலும் மகீஷ் தீக்ஷன சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, அவுஸ்திரேலிய அணியினை 30 வருடங்களின் பின்னர் இலங்கை மண்ணில் வைத்து ஒருநாள் தொடர் ஒன்றில் வீழ்த்துவதற்கும் தீக்ஷன பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<