டி20 யில் புதிய சாதனையுடன் தென்னாபிரிக்காவை வெற்றி பெறச் செய்த தாஹிர்

2732
Image courtesy - Cricket South Africa Photo

தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

தென்னாபிரிக்காவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று (9) நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி சார்பாக ஜிஹான் கொலீட் மற்றும் வேன் டேர் டஸ்ஸன் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளுக்கு அறிமுக வீரராக அணியில் இணைக்கப்பட்டிருந்தது விஷேட அம்சமாகும்.   

ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா

தென் ஆபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச …

அறிமுக வீரர் கொலீட் மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வில் இருந்த டி கொக் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். எனினும், முதல் இரு ஓவர்களில் இருவரும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு  ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டு ப்ளெசிஸ் மற்றும் மற்றைய அறிமுக வீரர் டஸ்ஸன் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 41 ஓட்டங்களை பெற்றிருந்த போது அதிரடியாக விளையாடிய டு ப்ளெசிஸ் 20 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த டஸ்ஸன் மற்றும் மில்லர் ஜோடி 87 ஓட்டங்களை பெற இறுதியில் தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை தமது இன்னிங்ஸிற்காக பெற்றுக் கொண்டது.  

துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் டஸ்ஸன் தனது கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்து 56 ஓட்டங்களையும் மில்லர் 39 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பாக ஜார்விஸ் மூன்று விக்கெட்டுகளையும் போபு இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.   

ஏற்கனவே, 3-0 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை இழந்த ஜிம்பாப்வே அணி இத்தொடரில் தமது முதலாவது வெற்றியை பெற்றுக்கொள்ள ஓவர் ஒன்றுக்கு சராசரியாக 8 ஓட்டங்கள் வீதம் பெற வேண்டிய நிலையில்  பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

அவ்வணி இம்ரான் தாஹிரின் சுழல் பந்துக்கு முகங்கொடுப்பதில் மிகவும் சிரமப்பட்டனர். முதல் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அவர் மொத்தமாக 4 ஓவர்கள் பந்து வீசி 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இது தென்னாபிரிக்க பந்து வீச்சாளர் ஒருவர் சர்வதேச டி20 போட்டிகளில் பெற்றுக் கொண்ட இரண்டாவது சிறந்த பந்து வீச்சுப் பிரதியாகும். அது மாத்திரமின்றி சர்வதேச  டி20 யில் தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் தன்வசப்படுத்திக் கொண்டார்.

மும்பை அணியிலிருந்தது மாலிங்கவின் பந்துவீச்சை அறிய உதவியாக இருந்தது – ஜோஸ் பட்லர்

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து…

எனவே, 17.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்று 34 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. அவர்களின் துடுப்பாட்டத்தில் பீட்டர் மோர் அதிகபட்சமாக 44 ஓட்டங்களையும் பிரண்டன்  மவுதா 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் தவிர்த்து ஏனைய பந்து வீச்சாளர்களான ஜூனியர் டாலா மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி அணியின் வெற்றிக்காக தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா அணி – 160/6  (20)டஸ்ஸன் 56, மில்லர் 39, டு ப்ளெசிஸ் 34, ஜார்விஸ் 37/3, போபு 24/2

ஜிம்பாப்வே அணி – 126 (17.2)மோர் 44, மவுதா 28,  தாஹிர் 23/5, பெலுக்வாயோ 25/2, டாலா 25/2

போட்டி முடிவு: தென் ஆபிரிக்க அணி 34 ஓட்டங்களால்  வெற்றி.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<