அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் மஹீஷ் தீக்ஷன ஆடுவாரா?

ICC Men’s T20 World Cup 2021

181

இலங்கையின் மாயாஜால சுழல் பந்துவீச்சாளரான 21 வயதுடைய மஹீஷ் தீக்ஷன T20 உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ‘சுபர் 12’ போட்டியில் விளையாட உடல் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் முதல் சுற்றின் மூன்று போட்டிகளில் தீக்ஷன எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், உபாதை (SIDE STRAIN) காரணமாக பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. எவ்வாறாயினும், தனது முதலாவது T20 உலகக் கிண்ணத்தை வெல்லப் போராடும் அவுஸ்திரேலியாவுக்கு அவர் கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<<பங்களாதேஷிற்கு எதிரான போட்டியை தவறவிடும் மஹீஷ் தீக்ஷன>>

எல்லாம் நன்றாக இருந்தால், மஹீஷ் நாளைய (ஒக்டோபர் 28) போட்டியில் விளையாடுவார். அவருக்கான பயிற்சியை நேற்று நாம் மீண்டும் ஆரம்பித்தோம். அவர் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ளார். எனவே நாம் நாளை அவரின் உடல் தகுதியை பார்ப்போம். எல்லாம் நன்றாக இருந்தால் அவர் ஆடுவார்‘ என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் இன்று (27) புதன்கிழமை தெரித்தார்.

டுபாயில் உள்ள ஐ.சி.சி. அகடமியில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை அணியின் பயிற்சியின்போது பயிற்சியாளர்களான கிரான்ட் லுடன் மற்றும் டில்ஷான் பொன்சேக ஆகியோர் தீக்ஷனவுக்கு ஓட்டப் பயிற்சிகளை வழங்கி இருந்தனர். எவ்வாறாயினும், அவர் பந்துவீசவில்லை.

அணி வரிசையில் பினுர பெர்னாண்டோவுக்கு பதில் தீக்ஷன இணைத்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் தீக்ஷனவின் இடத்தில் அதிக உயரம் கொண்ட இடது கை வேகப் பந்துவீச்சாளரான பினுர ஆடினார்.

பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை சாய்ப்பதில் தேர்ந்தவராக உள்ள தீக்ஷன அணியில் இணைத்துக் கொள்ளப்படுவது இலங்கை சுழற்பந்து வரிசையை பலப்படுத்துவதாக உள்ளது. சுழற்பந்துக்கு அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசை தடுமாறும் சூழலில், தீக்ஷன அந்த அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

<<T20i புதிய தரவரிசையில் இலங்கை மற்றும் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்>>

அவர் தரமான பந்துவீச்சாளர். அவர் இன்னும் இளமையானவராக இருக்கிறார். தனது பாணியில் போட்டிகளில் விளையாடக் கூடியவராகவும் உள்ளார். அவுஸ்திரேலியாவை நாம் ஆராய்ந்து உள்ளோம். பாகிஸ்தானுடன் நான் இருந்தபோது அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் சுழல் பந்துவீச்சை வெற்றிகரமாக பயன்படுத்திய தொடர் இடம்பெற்று நீண்ட காலம் செல்லவில்லை. எனவே அது வெற்றி அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மஹீஷை எதிர்கொள்ளாதவராக இருந்தால், அவர் சில நெருக்கடிகளை கொடுப்பார். அவரிடன் பல்வேறு வித்தியாசமான பந்துவீச்சுகள் உள்ளன. அவைகளுக்கு சரியாக முகம்கொடுக்காவிட்டால் தடுமாறுவீர்கள். எனினும் நாளை விறுவிறுப்பான போட்டியாக இருக்கும்‘ என்று அத்தர் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் சுபர் 12 சுற்றில் தமது முதல் போட்டியில் முறையே தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வென்றன.  இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இலங்கை நேரப்படி வியாழக்கிழமை பி.ப. 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>