புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற “ட்ரெகன்ஸ் லீக் -2017” போட்டிகளின் மற்றுமொரு லீக் ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில், புத்தளம் பிரதேசத்தின் அதிகளவிலான ரசிகர்களை தன்னகத்தே ஈர்த்துள்ள லிவர்பூல் கழகத்திற்கும் வளர்ந்து வரும் த்ரீ ஸ்டார் கழகத்திற்குமிடையில் இடம்பெற்றது. 

பெருந்திரலான ரசிகர்கள் மைதானத்தை சூழ்ந்து காணப்பட்ட இப்போட்டியில் பலம் மிக்க லிவர்பூல் கழகம் 4-2 என்ற கோல்கள் அடிப்படையில் த்ரீ ஸ்டார் கழகத்தை வீழ்த்தி தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டது.

ஆட்டம் ஆரம்பமாகி 7ஆவது நிமிடத்தில் தமக்குக் கிடைத்த ப்ரீ கிக் உதையை த்ரீ ஸ்டாரின் நஸாட் உயர்தி அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

மேலும் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் த்ரீ ஸ்டார் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை நிப்ராஸ் பெற்றார். அவர் அடித்த பந்து நேராக கோல் காப்பாளர் ஹூசைரின் கைகளிலே சரணடைய வாய்ப்பு வீணானது.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் அப்ரான் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை ஹஸீல் பெற்று கம்பத்திற்குள் அடிக்க அதை சிறப்பாகச் செயற்பட்டு கோல் காப்பாளர் ரிகாஸ் கையால் தட்டிவிட மீண்டும் பந்து முஸக்கீரின் கால்களுக்கு சென்றது. அதனை அவர் மீண்டும் கம்பம் நோக்கி உதைய அதையும் பாய்ந்து ரிகாஸ் தடுத்துவிட்டார். இதனால் லிவர்பூலின் இரண்டு கோல் வாய்ப்புகளும் வீணானது.

நேரம் செல்லச் செல்ல லிவர்பூலின் ஆட்ட வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. மைதானமும் ரசிகர்களின் ஆரவாரத்தால் ஆட்டம் காணத் தொடங்கியது.

இளையோர் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை 5-2 என்ற…

மேலும் 30ஆவது நிமிடத்தில் அலி மைதானத்தின் மத்திய பகுதியிலிருந்து தனக்கு கிடைத்த பந்தினை வேகமா த்ரீ ஸ்டாரின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று இஸராபிடம் கொடுக்க அதை உயர்த்தி கம்பத்திற்கு மேலால் அடித்தார்.

மீண்டும் 3 நிமிடங்களின் பின்னர் அப்ரார் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை அலி பெற்று த்ரீ ஸ்டாரின் மூன்று தடுப்பு வீரர்களை நிலை குலையச் செய்து கம்பத்தின் வலப் பக்கத்தினூடாக பந்தை உள்ளனுப்ப லிவர்பூல் கழகம் முதல் கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றது.

மீண்டும் 39ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை அலி கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க பந்து கம்பத்திற்கு சற்று மேலால் சென்றது.

போட்டியில் லிவர்பூலின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. த்ரீ ஸ்டார் கழக வீரர்கள் சற்று களைத்த நிலையில் காணப்பட அதனை லிவர்பூல் கழகம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

43ஆவது நிமிடத்தில் லிவர்பூல் கழக வீரர் அலி கொடுத்த இலகுவான கோலுக்குரிய பரிமாற்றத்தை கம்பத்திற்கு மிக அருகிலிருந்து பெற்ற முஸக்கீர் பந்தை கம்பத்திற்கு வெளியே அடித்து விட மைதானம் சில நிமிடங்கள் அமைதியானது.

அடுத்த நிமிடத்தில் மீண்டும் அலிக்குக் கிடைத்த பந்தை இரண்டு தடுப்பு வீரர்களைக் கடந்து மீண்டும் முஸக்கிரிடம் கொடுக்க, தனித்து நின்ற கோல் காப்பாளர் ரிகாஸின் கைகளில் படாத வண்ணம் கம்பத்தின் வலப்புறமாக மெதுவாக பந்தை உள்ளனுப்பி லிவர்பூல் கழகத்தின் கோல் கணக்கை இரட்டிப்பாக்கினார்.

முதல் பாதி: லிவர்பூல் விளையாட்டுக் கழகம் 2 – 0 த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம்

முதல் பாதி முன்னிலையேடு இரண்டாம் பாதி டிஆட்டத்தை ஆரம்பித்த லிவர்பூல் கழகம், 2ஆவது நிமிடத்தில் ஹஸீல் கொடுத்த பந்தை முஸக்கிர் கம்பம் நோக்கி திருப்பி அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் சென்று லிவர்பூலின் கோல் பெறும் முயற்சியை வீணாக்கியது.

ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் மத்திய பகுதியிலிருந்து த்ரீ ஸ்டார் வீரர் அஸ்ஹாம் பந்தை கம்பங்களை நோக்கி உள்ளனுப்ப அது லிவர்பூலின் தடுப்பு வீரர்களின் கால்களில் பட்டு வெளியேறியது.

மேலும் இரண்டு நிமிடங்கள் கடந்த நிலையில் அலி கொடுத்த நேர்த்தியான பந்தினை முஸக்கீர் பெற்று பெனால்டி பகுதிக்குள் கொண்டு செல்ல ஸல்மான் முறையற்ற விதத்தில் பந்தைப் பெற முயன்றதால் லிவர்பூல் கழகத்திற்கு பெனால்டி வழங்கப்பட்டது.

இதனால் த்ரீ ஸ்டார் வீரருக்கும் அதே அணியின் கோல் காப்பாளர் ரிகாஸிற்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ரிகாஸ் மைதானத்தை விட்டு வெளியேற நடுவர் ரிகாஸிற்கு மஞ்சள் அட்டையைக் காண்பித்தார்.

ரிகாஸ் வெளியேறியமையால் கோல் காப்பாளர் பொறுப்பை நிப்ராஸ் ஏற்று முஸக்கிர் அடித்த பெணால்டி உதையை தடுக்கும் முயற்சியில் தோல்வி கண்டார். இதனால் லிவர்பூல் கழகம் 3ஆவது கோலையும் பெற்றுக் கொண்டது.

மேலும் 75ஆவது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் கழகத்திற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க அதை நபாஸ் பொறுப்பேற்று கம்பத்தின் வலப்பக்கத்தால் உள்ளனுப்ப த்ரீ ஸ்டார் முதலாவது கோலைப் பதிவு செய்தது.

புத்தளம் மாவட்ட சம்பியனாக கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “சமபோஷ” அனுசரணையில் இடம் பெற்ற 14 வயதிற்கு…

லிவர்பூலின் வீரர்கள் த்ரீ ஸ்டாரின் பக்கங்களை ஆக்கிரமிக்க 83ஆவது நிமிடத்தில் அலி கொடுத்த பந்தை வேகமாக வந்த ஹஸீல் வந்த வேகத்திலே கம்பத்தின் இடப்புறமாக இருந்து கம்பத்திற்குள் அனுப்பிவைக்க, லிவர்பூல் கழகம் நான்காவது கோலையும் பெற்றுக் கொண்டது.

மீண்டும் 3 நிமிடங்கள் கடந்த நிலையில் அப்ரார் கொடுத்த உயரமான பந்துப் பரிமாற்றத்தை உயரே எழுந்து தன் காலால் முஸக்கீர் அடிக்க பந்து மைதானத்தை விட்டு வெளியேறியது.

போட்டியின் இறுதி நிமிட இறுதி முயற்சியாக அஸ்ஹாம் கொடுத்த பந்தை அஸ்ரான் கொண்டு சென்று பெனால்டி பகுதிக்குள் வைத்து கம்பத்திற்குள் உள்ளனுப்ப பந்து கோல் காப்பாளர் ஹூசைரின் கைகளில் படாமலே உட்செல்ல த்ரீ ஸ்டாரின் கோல் கணக்கு இரட்டிப்பானது.

முழு நேரம்: லிவர்பூல் விளையாட்டுக் கழகம் 4 – 2 த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – அலி 33’, முஸக்கீர் (44’ & 62’), ஹஸீல் 83’

 த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – நபாஸ் 75’, அஸ்ரான் 87’

சிவப்பு அட்டைகள்

த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – சல்மான் 81’

மஞ்சள் அட்டைகள்

த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் – நபாஸ் 50’, சல்மான் (53’ & 81’), ரிகாஸ் 62’

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – நப்ரி 81’