பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அடுத்த T20I உலகக் கிண்ணத் தொடர் வரை பங்களாதேஷ் T20 அணியின் தலைவராக லிடன் தாஸினை நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
>>இலங்கை – பங்களாதேஷ் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது
பங்களாதேஷ் T20 அணியின் தலைவராக செயற்பட்டு வந்த நஜ்முல் ஹொசைன் ஷன்டோ குறித்த பதவியினை தனக்கு இருக்கும் பணிச்சுமை காரணமாக இராஜினமா செய்தார்.
இந்த நிலையில் பங்களாதேஷ் T20I அணித்தலைவர் பதவிக்காக வெற்றிடம் ஒன்று உருவாகியது. இதனை பூர்த்தி செய்யும் வகையிலேயே லிடன் தாஸ் தலைவர் பொறுப்பினை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற T20I தொடரில் பங்களாதேஷினை வெற்றிகரமாக வழிநடாத்திய லிடன் தாஸ் தான் முழுநேர தலைவராகிய பின்னர் முதலாவதாக பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் நடைபெறும் தொடர்களில் பங்களாதேஷினை வழிநடாத்தவிருக்கின்றார்.
இதேவேளை பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் பங்கெடுக்கும் T20 தொடர்களில் பங்களாதேஷ் அணியினை மெஹிதி ஹஸன் பிரதி தலைவராக வழிநடாத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை பங்களாதேஷ் அணி லிடன் தாஸ் தலைமையில் பாகிஸ்தானில் ஆடும் T20 தொடர் இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பங்களாதேஷ் T20 குழாம் (பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சிய தொடர்கள்)
லிடன் தாஸ் (தலைவர்), தன்சித் ஹஸன், பர்வேஸ் ஹொசைன், சௌம்யா சர்க்கார், நஜ்முல் ஹொசைன், தவ்ஹீத் ரிதோய், சமிம் ஹொசைன், ஜாகேர் அலி, ரிசாட் ஹொசைன், மஹேதி ஹஸன், தன்வீர் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூட், தன்சிம் ஹஸன் சகீப், நாஹிட் ரனா, சொரிபுல் இஸ்லாம்