ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித் தலைவர்கள்

Asia Cup 2022

588

ஆசியாவில் நடைபெறுகின்ற மிகவும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15ஆவது அத்தியாயம் தற்போது சூடு பிடித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையில் இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் T20 வடிவில் நடைபெறுகின்றது.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 பலமிக்க கிரிக்கெட் அணிகள் அல்லது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுடன் மேலும் ஒரு ஆசிய அணி தகுதிச் சுற்றில் விளையாடி ஆசியக் கிண்ணத்தில் விளையாடும் இம்முறை தொடரில் ஆறாவது அணியாக ஹொங் கொங் அணி தம்மை உள்வாங்கியுள்ளது.

உலக கிரிக்கெட்டின் சம்பியனை உலகக் கிண்ணத்தை வைத்து தீர்மானிப்பது போல ஆசிய கண்டத்தின் நம்பர் 1 கிரிக்கெட் அணியை தீர்மானிக்கின்ற ஒரு தொடராக கடந்த 1984ஆம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1984ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற முதல் ஆசியக் கிண்ணத் தொடரில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது

ஆசியக் கிண்ணத்தில் இதுவரை நடைபெற்ற 14 தொடர்களில் 7 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா வெற்றிகரமாக அணியாக திகழ்கிறது. அதேபோல, இலங்கை அணி 5 தடவைகள் ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்று 2ஆவது இடத்தில் உள்ள்து. பாகிஸ்தான் அணி 2000, 2012 ஆகிய ஆண்டுகளில் ஆசியக் கிண்ண சம்பியனாகத் தெரிவாகி 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்தநிலையில், ஆசியக் கிண்ணத் தொடரின் 2ஆவது வெற்றிகரமான அணியாக வலம்வந்து கொண்டிருக்கின்ற இலங்கைக்கு 5 சம்பியன் பட்டங்களையும் வென்று கொடுத்த அணித் தலைவர்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

துலீப் மெண்டிஸ்

1986ஆம் ஆண்டு ‘ஜான் பிளேயர் கோல்ட் ட்ராபி’ என்ற பெயரில் ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையின் கொழும்பில் நடைபெற்றது. இலங்கையுடனான உறவில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இந்தத் தொடரை இந்தியா புறக்கணித்தது.

இதன்படி இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்குபற்றிய இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் துலீப் மெண்டிஸ் தலைமையிலான இலங்கையும், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தானும் மோதின.

கொழும்பு SCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் ஆசியக் கிண்ணத்தை வென்ற முதல் தலைவர் என்ற பெருமையை துலீப் மெண்டிஸ் பெற்றுக் கொண்டார்.

அர்ஜுன ரணதுங்க

1986இல் துலீப் மெண்டிஸ் தலைமையில் இலங்கை அணி முதல் முறையாக ஆசியக் கிண்ண சம்பியனாகத் தெரிவாகினாலும், அதன்பிறகு நடைபெற்ற 1988, 1991 மற்றும் 1995 ஆகிய மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களிலும் இந்தியாவிடம் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

எனினும், 1997ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் 6ஆவது அத்தியாயத்தில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 4 அணிகள் பங்குபற்றின.

புள்ளிப் பட்டியலில் முதலிரெண்டு இடங்களைப் பிடித்த இலங்கை – இந்திய அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றியீட்டி 2ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தது.

உலகக் கிண்ண வெற்றி நாயகன் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஆடிய இலங்கை அணிக்கு, அடுத்தடுத்து இரண்டு பெரிய தொடர்களில் வெற்றி பெறும் வாய்பும் கிடைத்தது.

இலங்கை அணியின் வெற்றியில் சனத் ஜயசூரிய (63), மார்வன் அத்தபத்து (84) மற்றும் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க (62) ஆகியோரது அரைச் சதங்கள் முக்கிய பங்கு வகித்தன.

அதுமாத்திரமின்றி, இந்த தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த (4 போட்டிகள், 272 ஓட்டங்கள்) வீரர்களில் முதலிடத்தைப் பிடித்த அர்ஜுன ரணதுங்க தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மார்வன் அத்தபத்து

கடந்த 2004ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் மார்வன் அத்தபத்து தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மீண்டும் இந்திய அணியை 25 ஓட்டங்களால் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவாகியது.

இப்போட்டியில் மார்வன் அத்தபத்து மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரது அரைச் சதங்களினால் இலங்கை நிர்ணயித்த 228 ஓட்டங்களை துரத்திய இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

இப்போட்டியில் அரைச் சதமடித்த அணித் தலைவர் மார்வன் அத்தபத்து இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்று இலங்கைக்கு 3ஆவது ஆசியக் கிண்ணத்தை வென்று கொடுத்தார்.

அத்துடன், இந்தத் தொடர் முழுவதும் சகலதுறையிலும் பிரகாசித்து 293 ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சனத் ஜயசூரிய தொடர் நாயகன் விருதைப் பெற்றுக் கொண்டார்.

மஹேல ஜயவர்தன

Sri Lankan cricketers pose with the Asia Cup trophy at the end of the final of the Asia Cup between India and Sri Lanka at National Stadium in Karachi on July 6, 2008. Sensational spinner Ajantha Mendis took six wickets for just nine runs to help Sri Lanka beat India by 100 runs in the final here on Sunday to successfully defend the Asia Cup title. AFP PHOTO/Aamir QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP via Getty Images)

ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் ஆசியக் கிண்ணத் தொடரின் 9ஆவது அத்தியாயம் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்றது.

மஹேல ஜயவர்தன தலைமையில் லீக் சுற்றில் குழு A இல் பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளை தோற்கடித்த இலங்கை சூப்பர் 4 சுற்றிலும் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி கொண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது.

இந்தத் தொடர் முழுவதும் பந்துவீச்சில் மிரட்டி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்த அஜந்த மெண்டிஸ், இறுதிப் போட்டியில் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அவர் தெரிவானார்.

அதேபோன்று, இந்த இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சனத் ஜயசூரிய ஆரம்ப வீரராக களமிறங்கி 125 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஞ்செலோ மெதிவ்ஸ்

Sri Lanka’s cricket team captain Angelo Mathews (R) receives the tournament trophy following the presentation ceremony after winning the final match of the Asia Cup one-day cricket tournament between Pakistan and Sri Lanka at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on March 8, 2014. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

கடந்த 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 2 ஆசியக் கிண்ணங்களில் வெறுங்கையுடன் திரும்பிய இலங்கை கடந்த 2014இல் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்த அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் பங்களாதேஷ் மண்ணில் களமிறங்கியது.

5 அணிகள் பங்குகொண்ட இந்தப் போட்டித் தொடரில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்த இலங்கை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்து 5ஆவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது.

இப்போட்டியில் இலங்கை அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட லசித் மாலிங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்த, துடுப்பாட்டத்தில் லஹிரு திரிமான்ன சதமடித்து அசத்தியிருந்தார். அத்துடன், குறித்த இரண்டு வீரர்களும் முறையே இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் பெற்றுக் கொண்டனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<