பார்சிலோனா அணியில் பயிற்சிக்குத் திரும்பினார் மெஸ்ஸி

182
 

பார்சிலோனா கழகத்தில் இருந்து வெளியேறும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் லியோனல் மெஸ்ஸி அந்த அணியில் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். 

பார்சிலோனா அணிக்காக அதிக கோல் பெற்ற சாதனைக்குச் சொந்தக்காரரான 33 வயதுடைய மெஸ்ஸி வேறு அணிக்கு மாறுவது குறித்த கோரிக்கையை கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி விடுத்திருந்தார். எனினும் அவரை விடுவிப்பதற்காக பெரும் தொகையை எந்த அணியினாலும் செலுத்துவது சாத்தியமில்லை என்ற நிலையிலேயே தொடர்ந்து பார்சிலோனா கழகத்தில் நீடிக்கும் அறிவிப்பை அவர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். 

PSG நட்சத்திரம் நெய்மார் மற்றும் இரு வீரர்களுக்கு கொவிட்-19

இந்நிலையில் பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளர் ரொனால்ட் கோமனின் வருகைக்குப் பின் முதல் முறையாக மெஸ்ஸி கடந்த திங்கட்கிழமை (07) பயிற்சிக்குத் திரும்பியுள்ளார். 

பார்சிலோனா அணி எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி வில்லாரியல் அணியுடனான போட்டியுடன் தனது லா லிகா தொடரை ஆரம்பிக்கவுள்ளது. 

எனினும் பார்சிலோனா அணி வரும் சனிக்கிழமை கிம்னாஸ்டிக் அணியுடன் நட்புறவுப் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்க மாட்டார். 

கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிலிப்பே கோடின்ஹோவைப் போன்று மெஸ்ஸியும் தனியாகவே பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் குழாத்தின் எஞ்சிய வீரர்கள் ஒன்றாக பயிற்சி பெற்று வருகின்றனர்.   

மெஸ்ஸி கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி இடம்பெற்ற கழகத்தின் கொவிட்-19 சோதனையில் பங்கேற்க தவறியதோடு கழகத்துடன் தமது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது தொடர்பில் தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பியது தொடக்கம் பயிற்சியில் பங்கேற்காது இருந்தார். பார்சிலோனா கழகம் தம்மை சுதந்திரமாக விடுவிக்கும் என்று மெஸ்ஸி எதிர்பார்த்தார்.  

ஆறு மாதங்களில் புதிய விளையாட்டு சட்டம் – நாமல் ராஜபக்ஷ

எனினும், எந்த கழகமாயினும் மெஸ்ஸியை பெறுவதற்கு 700 மில்லியன் யூரோக்களை விடுவிப்பு தொகையாக செலுத்த விதிக்கப்பட்டது. இதன்மூலமே பார்சிலோனா கழகத்தின் விருப்பம் இன்றியேனும் மெஸ்ஸியால் அந்தக் கழகத்தை விட்டு வெளியேற முடியும் என்று நெருக்கடி ஏற்பட்டது. 

எதிர்வரும் பருவத்தில் பார்சிலோனாவுக்கு ஆட மெஸ்ஸி உடன்பட்டபோதும் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. அவரது ஒப்பந்த அடுத்த பருவம் வரை நீடித்தபோதும் எதிர்வரும் ஜனவரி தொடக்கம் வேறு கழகங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்த அவருக்கு அனுமதி கிடைக்கிறது. 

எனினும் பார்சிலோனா கழகத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் எதிர்வரும் வாக்கெடுப்பு மெஸ்ஸிக்கு தீர்க்கமானதாக இருக்கும். தற்போதைய தலைவர் ஜோசெப் மரியா பார்டோமியு மீண்டும் போட்டியிடவில்லை என்பதோடு அவருக்கு பதில் வரவிருக்கும் எவராயினும் மெஸ்ஸியை தொடர்ந்து அணியில் நீடிப்பதற்கு முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.  

மறுபுறம் பார்சிலோனா புதிய பயிற்சியாளர் கோமன் அணியில் சில வீரர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதில் சாமுவேல் உம்டிடி, ஆர்டுரோ விடால் மற்றும் மெஸ்ஸியின்  நெருங்கிய நண்பரான லுவிஸ் சுவாரஸ் ஆகிய முன்னணி வீரர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களும் திங்கட்கிழமை பயிற்சிக்கு திரும்பினர்.   

Video – FFSL தலைவர் கிண்ணத்தில் நடந்தது என்ன ?| FOOTBALL ULAGAM

கோமன் திட்டத்தில் இவான் ரகிடிக்கும் இடம் இல்லாத நிலையில் அவர் செவில்லா அணியுடன் கடந்த வாரம் ஒப்பந்தம் செய்துகொண்டார்.  

கோமன் உடன் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி முதல் முறை சந்திப்பை ஏற்படுத்திய மெஸ்ஸி, தாம் கழகத்தில் இருந்து வெளியேறும் செய்தியையே கூறியிருந்தார். இந்நிலையில் கோமனை பயிற்சியில் முதல் முறை சந்திதுள்ளார்.

இப்போது என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது என்று பார்சிலோனா கழகத்தில் நீடிக்கும் அறிவிப்பை வெளியிட்டபோது மெஸ்ஸி கூறியிருந்தார். 

புதிய பயிற்சியாளர்கள் மற்றும் திட்டங்களை கொண்டுள்ளது. அது நல்லது என்றாலும் அணி அதற்கு எப்படி பதிலளிக்கப்போகிறது மற்றும் எம்மை அது உயர் மட்டத்தில் போட்டியிட அனுமதிக்குமா என்பதை பார்க்க வேண்டும். நான் அணியில் நீடிக்கிறேன் என்றும் பார்சிலோனாவுக்காக எனது உச்சத்தை வழங்குவேன் என்பதையுமே என்னால் கூற முடியும் என்று மெஸ்ஸி குறிப்பிட்டிருந்தார். 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<