இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான பதினொருவரை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பதினொருவரில் முக்கியமான மாற்றமாக உபாதையடைந்துள்ள சொஹைப் பாசீருக்கு பதிலாக லியாம் டவ்ஸன் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியை துரத்தும் காயம்: முக்கிய சகலதுறை வீரர் விலகல்
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதியாக விளையாடியிருந்த லியம் டவ்ஸன் மீண்டும் டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக இணைக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியானது இவருடைய நான்காவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
சொஹைப் பாசீர் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார். முதல் இன்னிங்ஸின் போது இவருடைய இடதுகை விரலில் உபாதை ஏற்பட்டிருந்தது. எனினும் போட்டியின் இறுதியில் மொஹமட் சிராஜின் விக்கெட்டினை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தார்.
எனினும் அவருடைய உபாதையின் தீவிரம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக லியம் டவ்ஸன் இணைக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளதுடன், நான்காவது போட்டி நாளை (23) மென்செஸ்டரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பதினொருவர்
ஷெக் கிரவ்லே, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹெரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜேமி ஸ்மித், லியம் டவ்ஸன், கிரிஸ் வோக்ஸ், பிரைடன் கேர்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<