இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது.
>>தொடரின் முதல் T20 போட்டியில் இலங்கை U19 மகளிர் அணிக்கு வெற்றி<<
ஏற்கனவே அவுஸ்திரேலியா ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்காவுடன் இணைந்து தெரிவாகியிருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை டெஸ்ட் தொடரின் முடிவுகள் அவுஸ்திரேலியாவிற்கு எந்தவிதப் பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்ற போதும், இலங்கை அதன் சொந்த மண்ணில் சவாலாக காணப்படும் என்பதனால் இப்போதிருந்தே அவுஸ்திரேலியா இலங்கை டெஸ்ட் தொடருக்காக தயார்படுத்தல்களை ஆரம்பித்திருக்கின்றது,
அதன்படி இலங்கையின் களநிலைமைகளுக்கு முகம் கொடுக்க அவுஸ்திரேலியா ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கவிருப்பதோடு அங்கே சுமார் ஒரு வாரகாலம் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றது.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சுழல்நிலைமைகளை கருத்திற்கொண்டு அவுஸ்திரேலிய அணியின் பயிற்சிகள் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவரான பேட் கம்மின்ஸ் தன்னுடைய இரண்டாவது குழந்தையினை எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவர் இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
எனவே பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியினை ஸ்டீவ் ஸ்மித் வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய வீரர்கள் குழாம் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<