ஆஸி. வீரருக்கு பந்து வீசுவதற்கு பயிற்றுவித்த லசித் மாலிங்க

692
ICC

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க விளையாடவில்லை.

உலகக் கிண்ண தொடருக்கான ஒன்பது போட்டிகளிலும் மாலிங்க விளையாட வேண்டும் என்பதால், அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

இம்முறை உலகக் கிண்ணத்திலும் ஹட்ரிக் எடுக்க எதிர்பார்க்கும் லசித் மாலிங்க

வயது அதிகரித்துச் செல்கின்ற போதிலும், இலங்கையின் வேகப்பந்து நட்சத்திரமான…

எவ்வாறாயினும், போட்டியின் போது இலங்கை அணியுடன் இணைந்திருந்த லசித் மாலிங்க, போட்டிக்கு பின்னர் செய்த செயல் ஒன்று கிரிக்கெட் இரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது. நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்ற போதும், போட்டியை தொடர்ந்து மாலிங்க, அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான மார்க்கஸ் ஸ்டொய்னிஸிற்கு பந்தின் வேகத்தை எவ்வாறு குறைத்து வீசுவது என பயிற்றுவித்திருந்தார்.

உலகக் கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்னர், மாலிங்க இவ்வாறு எதிரணி வீரர் ஒருவருக்கு பந்து வீச்சு முறைமையை கற்றுக்கொடுத்தமை, உலக இரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, பூரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேறு எந்த வீரராக இருந்தாலும், இவ்வாறான தருணத்தில் பந்துவீச்சின் இரகசியங்களை வெளிப்படையாக கூறுவதில்லை. ஆனால், மாலிங்க நேற்றைய தினம் பந்தின் வேகத்தை எவ்வாறு குறைப்பது என ஸ்டொய்னிஸிற்கு பயிற்றுவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவரிடம் மாலிங்க தெரிவிக்கையில், “மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் குறைந்த வேகத்தில் பந்துகளை வீசும் திறன் மிக முக்கியம். மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஐ.பி.எல். தொடரின் போதும், நான் எவ்வாறு குறைந்த வேகத்தில் பந்து வீசுகிறேன் என தெரிந்துக்கொள்ள விரும்பினார்.

இன்று அவருக்கு சில நுணுக்கங்களை பயிற்றுவித்தேன். இவ்வாறு நாம் செயற்படுவதன் ஊடாக சர்வதேச கிரிக்கெட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல முடியும். யார் என்னிடம் உதவிகளை (பந்து வீசுவதில்) கேட்டாலும், என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடியும். என்னால், ஏன் குறைந்த வேகத்தில் பந்துகளை வீச வேண்டும்,  குறித்த பந்தினை எவ்வாறு வீச வேண்டும் மற்றும் எந்த நேரங்களில் குறித்த பந்துகளை வீசு வேண்டும் என்ற நுணுக்கங்களை ஏனையவர்களுக்கு கூறமுடியும்”

லசித் மாலிங்க இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். ஆரம்பத்தில் இவர் அதிக வேகத்துடன் பந்து வீசினாலும், இப்போது அவரது வேகம் குறைந்து விட்டது. ஆனாலும், அவரின் வேகம் குறைத்து வீசப்படும் பந்துகளுக்கும், இதுவரையிலும் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வருகின்றனர். இதற்காக மாலிங்க அதிகம் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், அவர் வலைப்பயிற்சியின் போது, 12 தொடக்கம் 18 பந்துகளை வெவ்வேறு விதமாக வீச பயிற்சி எடுத்து வருவதாகவும் ஊடகவியலாளரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மாலிங்க தனது நுணுக்கத்தின் மூலமாகவும், போட்டியின் தன்மையையும், துடுப்பாட்ட வீரரின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கடைசி ஓவர்களில் சிறந்த முறையில் பந்துவீசும் திறமையை அதிகப்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் குறிப்பிட்ட அவர், “பந்துவீச்சாளர் ஒருவருக்கு அவரது திறமை முதன்மையானது. பின்னர், போட்டியின் தன்மையை அவர் நன்கு அறிந்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு விடயங்களும் ஒரு பந்து வீச்சாளரை மேலும் பலம் வாய்ந்தவராக்கும்” என்றார்.

அதேவேளை கிரிக்கெட் என்பது துடுப்பாட்ட வீரர்களுக்கான போட்டியாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்ட மாலிங்க, பந்து வீச்சாளர்களும் முக்கியமானவர்கள் என்பதை தெரிவித்திருந்தார். “கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான விளையாட்டு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பந்து வீச்சாளர்கள் போட்டியை மாற்றக்கூடியவர்கள்” என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். .

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<