MCC இன் தலைவராகும் நகைச்சுவை நடிகர் ஸ்டீபன்

113

கிரிக்கெட் விளையாட்டின் சட்ட திட்டங்களை தீர்மானிக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) அடுத்த தலைவராக நகைச்சுவை நடிகரும், கிரிக்கெட் பிரியருமான ஸ்டீபன் ப்ரை (Stephen Fry) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவியினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஸ்டீவன் ப்ரை பொறுப்பேற்கவுள்ளதாக மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் பேசிய ஸ்டீபன் ப்ரை அதனை மிகப் பெரிய கௌரவங்களில் ஒன்றாக கருதுவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் கூறியதாவது,

இது விளையாட்டில் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதற்காக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு கழகம். அதேபோன்று, இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவது உண்மையிலேயே பெருந்தன்மையாக கருதுகிறேன்.

இந்த நம்பமுடியாத வாய்ப்பை வழங்கிய கிளேர் கோனருக்கு, நான் நன்றி கூறுகிறேன், மேலும் எதிர்வரும் கோடை காலத்தில் இருந்து எனது சொந்த இன்னிங்ஸைத் தொடங்கும் முன் தலைவர் பதவிக்கு அவருக்கு ஆதரவளிக்க நான் எதிர்பார்த்துள்ளேன் என தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டவரான ப்ரை ஒரு நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், கவிஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குனர். அவர் மனநல ஆரோக்கியத்திற்கான ஒரு வழக்கறிஞரும் ஆவார். அதுமாத்திரமின்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மனநலம் தொடர்பான தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

2011 ஆம் ஆண்டு முதல் MCC உறுப்பினராக இருந்த அவர், கிரிக்கெட்டை விரும்புபவராக பரவலாக அறியப்பட்டவர். அத்துடன், 2021இல் 20 ஆவது MCC கவுட்ரி (Cowdrey) விரிவுரையை நிகழ்த்தினார்.

இதன் மூலம் 2008 இல் பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவைத் தொடர்ந்து விரிவுரை நிகழ்த்திய இரண்டாவது கிரிக்கெட் வீரர் அல்லாத ஆளுமையாக இடம்பிடித்தார்.

இதனிடையே, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான கிளேர் கோனர் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

லண்டனின் லோர்ட்ஸ் பகுதியில் 1787 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் விளையாட்டினுடைய விதிமுறைகளை முதல் தடவையாக உருவாக்கியதோடு, இந்த கழகம் உருவாக்கிய கிரிக்கெட் விதிமுறைகளையே சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<