T20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை

77
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற T20 தொடரின் முதல் போட்டியில் கொலின் டி கிராண்ட்ஹோமின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலமே லசித் மாலிங்க, T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

மெண்டிஸின் அபார ஆட்டத்தை வீணடித்து நியூசிலாந்து அணி வெற்றி

சுற்றுலா நியூசிலாந்து மற்று இலங்கை அணிகளுக்கு…..

லசித் மாலிங்க கைப்பற்றிய குறித்த விக்கெட் நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரின் முதல் போட்டியில் லசித் மாலிங்கவினால் பெறப்பட்ட இரண்டாவது விக்கெட்டாக அமைந்ததோடு, T20 சர்வதேச போட்டிகளில் லசித் மாலிங்கவின் 99 ஆவது விக்கெட்டாகவும் அமைந்தது. 

இவ்வாறாக 99 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம் T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (98) கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் சகலதுறைவீரர் சஹீட் அப்ரிடியின் சாதனையை முறியடித்து லசித் மாலிங்க, T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய புதிய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கின்றார். 

இலங்கை T20 அணியின் தலைவரான லசித் மாலிங்க, இந்த சாதனையினை படைப்பதற்கு நியூசிலாந்து அணியுடனான T20 போட்டியோடு சேர்த்து மொத்தமாக 74 போட்டிகளை எடுத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதேநேரம், T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் லசித் மாலிங்கவின் பந்துவீச்சு சராசரி 19.44 ஆக உள்ளது. 

லசித் மாலிங்க T20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த சாதனை ஒருபுறமிருக்க நியூசியலாந்து அணியுடனான T20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியிருக்கின்றது.

இலங்கை அணியின் தோல்வியினால் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இந்த T20 தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (3) முதல் போட்டி இடம்பெற்ற இதே கண்டி சர்வதேச பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<