மட்ரிடின் வெற்றியை பரித்த PSG: Champions League அடுத்த சுற்றில் டொட்டன்ஹாம், சிட்டி

இரண்டு வார இடைவெளிக்குப் பின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுநிலை போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (27) அதிகாலை நடைபெற்றன. இதில் முக்கிய சில போட்டிகளின் முடிவுகள் வருமாறு,

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்் எதிர் ஒலிம்பியாகோஸ்

புதிய முகாமையாளர் ஜோஸ் மோரின்ஹோவின் கீழ் வலுவாகச் செயற்படும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்் B குழுவுக்கான போட்டியில் ஒலிம்பியாகோஸை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.  

மன்செஸ்டர் யுனைடட்டை கடைசி நிமிடத்தில் சமன் செய்த செபீல்ட் யுனைடட்

மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியை கடைசி நேரத்தில் ……

கடந்த நவம்பர் 19 இல் மோரிசியோ பொசட்டினோ அதிரடியாக நீக்கப்பட்டு மோரின்ஹோ நியமிக்கப்பட்ட நிலையில் டொட்டன்ஹாமின் தனது சொந்த மண்ணில் முதல் சம்பியன்ஸ் லீக் போட்டியாக இது இருந்தது. 

முதல் 20 நிமிடங்களுக்குள் யூசெப் எல் அரபி மற்றும் ரூபன் செமோடோ மூலம் கோல் பெற்று கிரேக்க அணியான ஒலிம்பியாகோஸ் அதிர்ச்சி கொடுத்தது. 

இந்நிலையில் 29 ஆவது நிமிடத்தில் மத்தியகள வீரர் எரிக் டயருக்கு பதில் எரிக் கிறிஸ்டியனை மோரின்ஹோ அனுப்பியது தீர்க்கமாக இருந்தது. முதல்பாதி ஆட்டம் முடிவுறும் நேரத்தில் டெல் அலி பெற்ற கோல் மூலம் டொட்டன்ஹாம் தனது கோல் எண்ணிக்கையை ஆரம்பித்தது.  

இரண்டாவது பாதியின் ஐந்தாவது நிமிடத்தில் லூகாஸ் மௌரோ பரிமாற்றிய பந்தை கொண்டு ஹர்ரி கேன் கோல் புகுத்தினார். இந்நிலையில் 73 ஆவது நிமிடத்தில் செர்கே அரிர் பெற்ற கோல் மூலம் டொட்டன்ஹாம் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 77ஆவது நிமிடத்தில் கேன் தனது இரண்டாவது கோலை பெற்று டொட்டன்ஹாம் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இந்த கோல்கள் மூலம் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் வேகமாக 20 கோல்களை அடைந்தவராகவும் கேன் பதிவானார். முன்னர் இந்த மைல்கல்லை எட்டிய அலெசன்ட்ரோ டெ பிரேவை விடவும் இரண்டு போட்டிகள் குறைவாக 24 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இந்த முடிவுடன் தனது குழுவில் பெயர்ன் முனிச்சுக்கு அடுத்து 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் டொட்டன்ஹாம் 16 அணிகள்  சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

ரியல் மெட்ரிட் எதிர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்

அதிக பரபரப்புக் கொண்ட சம்பியன்ஸ் லீக் போட்டியாக மாரிய ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான ஆட்டத்தில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 2-0 என பின்தங்கிய நிலையில் கடைசி நிமிடங்களில் இரண்டு கோல்களை பெற்று ஆட்டத்தை சமநிலை செய்தது. எனினும் இந்த இரு அணிகளும் A குழுவில் இருந்து ஏற்கனவே முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கரிம் பென்சமா 17 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் ரியல் மெட்ரிட் நெருக்கடி இன்றி முன்னிலை பெற்றது. பெடரிகோ வல்வார்டோ உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வந்தபோது ஆறு யார்ட் தூரத்திற்குள் இருந்த பென்சமா பந்தை வலைக்குள் புகுத்தினார்.  

முதல் பாதி முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும்போது மெட்ரிட் கோல்காப்பாளர் திபோட் கோர்டோயிசுக்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்தபோதும் வீடியோ நடுவர் உதவியை பெற்ற நிலையில் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது பேசுபொருளாக மாறியது.  

பென்சமா 79 ஆவது நிமிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருந்து தலையால் முட்டி தனது இரண்டாவது கோலை பெற ரியல் மெட்ரிட் 2-0 என முன்னிலை பெற்றது.  

எனினும் எதிரணி பின்களத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி கிலியன் எம்பாப்பே 81 ஆவது நிமிடத்திலும், இரண்டு நிமிடங்களில் பப்லோ சரபியா பெற்ற அபார கோல் மூலமும் PSG அணி போட்டியை சமநிலை செய்தது. 

இந்த முடிவின் மூலம் பிரான்ஸ் சம்பியனான PSG அணி A குழுவில் முதலிடத்தை பெற்றுள்ளது. 

ஜுவன்டஸ் எதிர் அட்லடிகோ மெட்ரிட்

போலோ டிபாலா ப்ரீ கிக் மூலம் பெற்ற அபார கோலினால் அட்லெடிகோ மட்ரிட் அணியை வீழ்த்திய ஜுவன்டஸ் அணி D குழுவில் முதலிடத்தை பிடித்தது. 

ஏற்கனவே சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஜுவன்டஸ் அணி டிபாலா மின்னல் வேகத்தில் உதைத்த ப்ரீ கிக் பந்து வலையின் மேல் பகுதியை தொட்டதை அடுத்து வெற்றியை உறுதி செய்து கொண்டது. போட்டியின் முதல்பாதி மேலதிக நேரத்தில் அந்த கோல் பெறப்பட்டது.  

லா லிகாவில் ரியல் மெட்ரிட், பார்சிலோன முதலிடத்தில்: லிவர்பூல் தொடர்ந்து வெற்றி

சர்வதேச போட்டி இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பமான இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ……

இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் ஸ்பெயின் கழகமான அட்லெடிகோ மெட்ரிட் தனது குழுவில் இரண்டாவது இடத்தில் நீடிப்பதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த போட்டியான லொகொமோடிவ் மொஸ்கோ அணியை வீழ்த்துவது கட்டாயமாகும். 

மன்செஸ்டர் யுனைடட் எதிர் ஷக்டர் டொனட்ஸ்க்

எட்டிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் உக்ரைனின் ஷக்டர் டொனட்ஸ்க் அணியுடனான போட்டியை 1-1 என சமநிலை செய்த மன்செஸ்டர் சிட்டி சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.   

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் 56 ஆவது நிமிடத்தில் இல்காய் குண்டோகன் பெற்ற கோல் மூலம் சிட்டி அணி முன்னிலை பெற்றபோதும் பதில் வீரராக வந்த மனோர் சொலொமன் 69 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் உதவியோடு டொனட்ஸ்க் அணி போட்டியை சமநிலை செய்தது. 

C குழுவுக்காக நடந்த மற்றைய போட்டியில் டினமோ சக்ரேப்புக்கு எதிராக அட்லாண்டா 2-0 என வெற்றியீட்டியதன் மூலமே அந்தக் குழுவில் முதலிடத்திற்கு முன்னேறிய மன்செஸ்டர் சிட்டி நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது. 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<