Home Tamil LPL தொடரில் தொடர் வெற்றிகளை குவிக்கும் ஜப்னா கிங்ஸ்

LPL தொடரில் தொடர் வெற்றிகளை குவிக்கும் ஜப்னா கிங்ஸ்

145
LPL 2021

லங்கா பிரீமியர் லிக்கின் (LPL) இன்றைய (12) ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி வொரியர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டிருந்த போதும், டக்வர்த் லுவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸ் அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

ஜப்னா கிங்ஸ் அணி கடந்த மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று, இந்த போட்டியில் களமிறங்கியதுடன், கண்டி வொரியர்ஸ் அணி தங்களுடைய கடந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஒரு வெற்றியுடன் இந்தப் போட்டியில் விளையாடினர்.

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் இலங்கையர்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில், முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய கண்டி வொரியர்ஸ் அணி நிதானமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

முதல் 7 ஓவர்களில், அஹமட் சேஷாட் மாத்திரம் ஆட்டமிழந்து வெளியேறியிருக்க, சரித் அசலங்கவின் சிறந்த பங்களிப்புடன் கண்டி வொரியர்ஸ் அணி 47 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன்போது, போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டதுடன், மீண்டும் ஆரம்பமாகிய போட்டியில், அணிக்கு தலா 16 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கண்டி வொரியர்ஸ் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பிக்க தொடங்கியது. இதில், சரித் அசலங்கவுடன், மினோத் பானுக இணைந்து துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைப் பெற்றனர்.

மினோத் பானுக 16 பந்துகளில், வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சுக்கு சிக்ஸர் ஒன்றை விளாசியதுடன், 20 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை, வஹாப் ரியாஸின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்திருந்தார். அடுத்து வந்த டொம் மூர்ஸ் 6 ஓட்டங்களை பெற, சரித் அசலங்க 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை குவித்திருந்தார்.

கண்டி வொரியர்ஸ் அணி 12.2 ஓவர்கள் நிறைவில் 94 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டது. எனவே, இந்த போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்திருந்த போதும், மீண்டும் ஒருமுறை இலங்கை மைதான ஊழியர்கள் வேகமாக செயற்பட, போட்டி அணிகளுக்கு

தலா 10 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன், கண்டி வொரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

எனவே, டக்வர்த் லுவிஸ் முறைப்படி, 2.2 ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில், வெற்றியிலக்காக ஜப்னா கிங்ஸ் அணிக்கு 95 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக சொஹைப் மலிக் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணியினர், எந்தவித அழுத்தங்களுமின்றி ஓட்டங்களை குவித்தனர். இடைக்கிடையில் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், முழுமையான அழுத்தமும் கண்டி வொரியர்ஸ் பக்கமே இருந்தது.

அவிஷ்க பெர்னாண்டோ 12 பந்துகளுக்கு 23 என்ற வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க, உபுல் தரங்க 13 ஓட்டங்களையும், டொம் கொலர்-கெட்மோர் 12 ஓட்டங்களையும் பெற, முதல் 5 ஓவர்களில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களை கடந்தது.

இவர்கள் மூவரின் ஆட்டமிழப்பின் பின்னர் ஜப்னா கிங்ஸ் அணிக்கு அனுபவம் கைகொடுத்திருந்தது. திசர பெரேரா தனக்கே உரித்தான பாணியில் வேகமாக ஓட்டங்களை குவிக்க, சொஹைப் மலிக் சரியான ஓட்ட வேகத்தில் ஓட்டங்களை பெற்றார். திசர பெரேரா 13 பந்துகளில் 29 ஓட்டங்களையும், சொஹைப் மலிக் 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, ஜப்னா கிங்ஸ் அணி 8.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

எனவே, ஜப்னா கிங்ஸ் அணி தொடர்ச்சியாக தங்களுடைய நான்காவது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில், முதல் இடத்தை தக்கவைத்துள்ளதுடன், கண்டி வொரியர்ஸ் அணி தங்களுடைய நான்காவது தோல்வியை இன்றைய தினம் சந்தித்தது.

 


Live

Jaffna Kings

Kandy Falcons



மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க