LPL தொடரின் இரண்டாவது கிண்ணத்தை குறிவைக்கும் ஜப்னா!

Lanka Premier League 2021

1034

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கடந்த ஆண்டு சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்த ஜப்னா கிங்ஸ் (ஸ்டாலியன்ஸ்) அணி இந்த ஆண்டும் மிகவும் பலமான அணியாக தங்களை இரண்டாவது பருவகாலத்துக்கு ஆயத்தப்படுத்தியுள்ளது.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற திசர பெரேரா கடந்த ஆண்டு அணியை வழிநடாத்தி சம்பியன் கிண்ணத்தை அணிக்கு வென்றுக்கொடுத்ததுடன், இந்த ஆண்டும் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனன்ஜய, மெண்டிஸ், எம்புல்தெனியவின் அபாரத்தால் 2-0 என தொடரை வென்ற இலங்கை

ஜப்னா அணியை பொருத்தவரை அணியின் உரிமையாளர்கள் மாற்றம் பெற்றிருந்தாலும், அணியின் பயிற்றுவிப்பு குழாம் மற்றும் வீரர்கள் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. எனவே, மீண்டும் ஒரே அணியாக கிண்ணத்தை தட்டிசெல்லும் முனைப்புடன் ஜப்னா கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

அதுமாத்திரமின்றி, அணியின் வீரர்கள் தெரிவிலும் ஜப்னா கிங்ஸ் அணி, சிறப்பாக செயற்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் தெரிவு, இளம் உள்ளூர் வீரர்கள் மற்றும் உள்ளூர் பிரதான வீரர்கள் என்ற அடிப்படையில் தங்களுடைய அணியை சரியாக கட்டமைத்துள்ளது.

உலகின் முதல் நிலை T20 பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்க அணியின் முக்கிய துறுப்புச்சீட்டாக உள்வாங்கப்பட்டுள்ளார். இவர், T20 உலகக் கிண்ணம் மற்றும் அபுதாபி T10 தொடர்களில் அபார பந்துவீச்சு பிரதிகளை பதிவுசெய்துவந்த நிலையில், ஜப்னா அணியுடன் இணைந்துள்ளார். எனவே, இவரது இணைவு அணிக்கு மிகப்பெரிய உந்துகோலாக அமையும்.

இவருடன் இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷனவுடன், யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளமை ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும்.

வேகப் பந்துவீச்சில் இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் சுட்டிக்காட்டியுள்ள இளம் வேகப் பந்துவீச்சாளரான சாமிக்க குணசேகரவும் இடம்பிடித்திருக்கின்றார்.  இவருடன் திசர பெரேரா, சுரங்க லக்மால், வஹாப் ரியாஸ் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் வேகப் பந்துவீச்சு துறையைப் பகிர்ந்துக்கொள்வர்.

ஜப்னா கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாக சுழல் பந்துவீச்சு இருப்பதுடன், அவர்களின் வெளிநாட்டு வீரர்களின் தெரிவு மற்றுமொரு சிறந்த திடத்தை அணிக்கு கொடுத்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட் உலகில் தற்போது அதிக அனுபவம் கொண்ட வீரராகப் பார்க்கப்படும் சொஹைப் மலிக் மற்றும் வஹாப் ரியாஸ், உஸ்மான் ஷின்வாரி போன்ற சர்வதேச அனுபவம் கொண்ட சிறந்த வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற இளம் வெளிநாட்டு வீரர்களும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில், தென்னாபிரிக்காவின் அனுபவ வீரர் பெப் டு பிளெசிஸ் இறுதிநேரத்தில் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றின் புதிய உருமாற்றம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் குடும்பத்துடன் இருக்க விரும்புவதன் காரணமாக ஜப்னா அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இவரின் வெளியேற்றம் இருந்தாலும், இளம் மற்றும் அனுபவம் என்ற ரீதியில் திட்டமிட்டப்படி அணியை ஜப்னா கிங்ஸ் உருவாக்கியுள்ளது.

ஜப்னா கிங்ஸ் அணியானது சுழல் பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் அனுபவம் என்ற அனைத்துவிதமான இடங்களையும் சரிவர பூர்த்திசெய்துள்ளதுடன், இம்முறை எதிரணிகளுக்கு கடுமையான சவாலை கொடுக்கக்கூடிய அணியாக உருவாகியிருக்கின்றது. கன்னி லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை வென்ற உட்சாகத்துடன் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியானது, இம்முறையும் கிண்ணத்தை தக்கவைத்து, மீண்டும் தங்களை சம்பியன் அணியாக இலங்கையின் முதற்தர லீக் தொடரில் நிருபிக்க எண்ணியுள்ளது.

அந்தவகையில் ஜப்னா கிங்ஸ் அணி, மற்றுமொரு பலம் மிக்க அணியான கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை லங்கா பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில், கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உள்நாட்டு வீரர்கள் – திசர பெரேரா (தலைவர்), வனிந்து ஹஸரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, உபுல் தரங்க, சதுரங்க டி சில்வா, சுரங்க லக்மால், மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, அஷேன் பண்டார, சாமிக்க குணசேகர, சம்மு அஷான், விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன், அஷான் ரந்திக, ரத்னராஜா தேனுரதன், கிரிஷான் சஞ்சுல

வெளிநாட்டு வீரர்கள் – பெப் டு பிளெசிஸ் (தென்னாபிரிக்கா), சொஹைப் மலிக் (பாகிஸ்தான்), வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான்), உஸ்மான் ஷின்வாரி (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), ஜெய்டன் சீல்ஸ் (மே.தீவுகள்),

உத்தேச பதினொருவர் – பெப் டு பிளெசிஸ், உபுல் தரங்க, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சொஹைப் மலிக், திசர பெரேரா (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சதுரங்க டி சில்வா, வஹாப் ரியாஸ், மஹீ)ஷ் தீக்ஷன, சாமிக்க குணசேகர

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<