இலங்கை ரக்பியில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிவு

76

இலங்கை ரக்பி சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பு ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. ரக்பி விளையாட்டில் இலங்கையிலுள்ள முக்கிய பல தலைமைகளுக்கு மத்தியில், இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் திரு. அசங்க செனவிரத்னவின் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் ரக்பி அரங்கின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்பட்டது.

நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை விரிவு படுத்தினார். அதனைத் தொடர்ந்து இலங்கை ரக்பி சங்கத்தின் பொருளாளர் திரு. ரேய் அபெயவர்தன வருடத்துக்கான கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்.

நவீன் ஹெனக்கன்கனம்கேயின் அபார ஆட்டத்தினால் புனித தோமியர் கல்லூரி சம்பியன்

இந்தப் பருவகாலத்திற்கான பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி செவன்ஸ்..

நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ரக்பி சங்கத்தினை 2016ஆம் ஆண்டு இலாபம் பெறும் நிலைக்கு நிறைவேற்றுக்குழுவை வழிநடாத்திய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார் அசங்க செனவிரத்ன. இலங்கை ரக்பி சங்கத்தின் பொருளாளர் சமர்ப்பித்த கணக்கறிக்கைக்கு அமைய 5 மில்லியன் ரூபாய் கையிருப்பில் உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த செனவிரத்ன, “கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் பொழுது, கடந்தாண்டு ரக்பி களத்தில் அதிகளவான திறமைகளை வெளிப்படுத்திய ஆண்டாக உள்ளது. 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ரக்பி பிரிவுகளில் ஆசிய சம்பியன் பட்டதை கைப்பற்றினோம். செவன்ஸ் ரக்பி போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்தி ஆசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றினோம்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ரக்பி போட்டிகளானது விளையாட்டு மட்டுமன்றி பொழுதுபோக்கு வியாபார அம்சமாகவும் உருமாறியுள்ளது. இணையதளங்கள் விளையாட்டுத் துறையை முற்றிலும் மாற்றியுள்ளன. இலங்கையிலும் அது பின்பற்றப்படுகின்றது என்றார்.

அத்துடன் இந்த வருடம் நடைபெறவுள்ள போட்டிகளில் வெளிநாட்டவர்களையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். கழக மட்டத்தில் விளையாடும் உள்ளூர் ரக்பி வீரர்களுக்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வழிமுறைகளை அமைக்கவுள்ளோம்.

15 பேர் கொண்ட ரக்பி குழாம் ஓன்று வெளிநாட்டு போட்டிகளில் பங்குபற்றும் போது 5 மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகின்றது. அதனால் செவன்ஸ் நோக்கி எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம். செவன்ஸ் ரக்பி வீரர்களின் வேலை சுமைகளை குறைத்து அவர்களுக்கு உதவி செய்ய கழகங்களின் உதவியை எதிர்பார்கின்றோம். எங்களால் ஆசிய செவன்ஸ் பட்டதை வென்று மகிழ்வுற முடியும். ஆனால், அதுவல்ல எமது நோக்கம். உலக மட்டத்தில் 20 அணிக்குள் நாம் இடம்பெற வேண்டும்.

அவர் கூறிய முக்கியமாக விடயங்களில் ஓன்று பாடசாலை ரக்பி போட்டிகள் குறித்தது. பாடசாலை மட்ட போட்டிகளை ஒழுங்கு செய்யும் விதம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். எங்களுடன் பாடசாலை ரக்பி சங்கத்தினை இணைத்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகியுள்ளன. அதனால் பாடசாலை மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்துக்கு பாடசாலை வீரரோருவரை உருவாக்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து அல்லது மலேசியா போன்ற நாடுகளுடன் விளையாடும் வாய்ப்புக்கள் கிடைக்காவிடில் தேசிய மட்டத்தில் அவர்கள் பிரகாசிப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.

மேலும், இந்த வருடத்தில் இலங்கை மகளிர் ரக்பியில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து சுட்டிக்காட்டிய செனவிரத்ன, எதிர்வரும் வருடத்திலும் மேலும் ஊக்கமளித்து அவர்களுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு செய்யவுள்ளதாக இறுதியாக தெரிவித்தார்.

வருடாந்த பொதுக் கூட்டம் நிறைவுறுவதற்கு முன்னதாக, ரக்பி நிறைவேற்று குழுவினால் கடந்த காலங்களில் ரக்பி போட்டிகளில் பிரகாசித்த சிறந்த சில வீரர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் சூப்பர் செவன்ஸ் போட்டிகளின்போது இந்த நட்சத்திர ரக்பி வீரர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.