LPL 2021 இல் களமிறங்கும் தமிழ் பேசும் வீரர்கள்

Lanka Premier League – 2021

2384

இலங்கை கிரிக்கெட் சபையும், IPG நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.  

இலங்கையின் நட்சத்திர வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் பங்குகொண்டுள்ள இம்முறை LPL தொடரில் இலங்கையில் உள்ள தமிழ் பேசுகின்ற ஐந்து வீரர்கள் 3 அணிகளுக்காக களமிறங்கவுள்ளனர்.

இதன்படி, இம்முறை LPL தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியில் வடக்கைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

>>LPL தொடரின் இரண்டாவது கிண்ணத்தை குறிவைக்கும் ஜப்னா!

இதில் கடந்த ஆண்டு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய 5 தமிழ் பேசுகின்ற வீரர்களில 3 பேர் மாத்திரமே இம்முறை LPL இல் ஜப்னா கிங்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன் மற்றும் ரட்னராஜா தேனுரதன் ஆகிய மூவருமே இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளனர்.

ஏனைய இரண்டு வீரர்களான செபஸ்டியம்பிள்ளை விஜயராஜ் மற்றும் கனகரட்னம் கபில்ராஜ் ஆகிய இருவரும் இம்முறை LPL தொடரில் எந்தவொரு அணிகளிலும் இடம்பெறவில்லை. இதில் சிறப்பம்சம் என்னவெனில் முன்னதாக நடைபெற்ற LPL ஏலத்தின் போது கபில்ராஜ் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

எனினும், அந்த அணி நிர்வாகத்தினால் கடைசி நேரத்தில் அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களினால் அவருக்கு கொழும்பு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது அவருக்கு மாத்திரமல்லாது, இலங்கையில் உள்ள கிரிக்கெட்டை விரும்புகின்ற தமிழ் பேசுகின்ற ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும், கவலையையும் கொடுத்துள்ளது.

அதேபோல, கடந்த ஆண்டு கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய மொஹமட் சிராஸையும் இம்முறை ஏலத்தில் எந்தவொரு அணியும் வாங்கவில்லை.

உள்ளூர் முதல்தரப் போட்டிகள் மற்றும் இலங்கை A அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற சிராஸுக்கும் இம்முறை LPL தொடரில் வாய்ப்பு வழங்காதது மிகப் பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகின்றது.

எனவே, கடந்த ஆண்டு LPL தொடரில் 7 தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும், இம்முறை அது ஐந்தாக குறைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

எவ்வாறாயினும், இம்முறை LPL தொடரில் விளையாடவுள்ள குறித்த ஐந்து தமிழ் பேசுகின்ற வீரர்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கு பார்ப்போம்.

விஜயகாந்த் வியாஸ்காந்த்

யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான விஜயகாந்த் வியாஸ்காந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்டுத்தியிருந்தார். இதில் கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினைக் கைப்பற்றி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கடந்த LPL தொடருக்குப் பிறகு பாடசாலை மட்ட கிரிக்கெட் போட்டிகளும், 19 வயதுக்குட்பட்ட அணி போட்டிளும் கொரோனா வைரஸ் காரணமாக பல தடைகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது.

எவ்வாறாயினும், இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டிவரை முன்னேறிய யாழ். மத்திய கல்லூரி அணிக்காக அவர் விளையாடியிருந்தார்.

இறுதிப்போட்டியில் வியாஸ்காந்த் பிரகாசிக்கத் தவறினாலும், ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரியுடனான அரையிறுதிப் போட்டியில் ஒரு விக்கெட்டினையும், வத்தளை புனித ஜோசப் கல்லூரியுடனான காலிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, கடந்த ஆண்டைப் போல இம்முறை LPL தொடரிலும் வியாஸ்காந்த்துக்கு ஒருசில போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெய்வேந்திரம் டினோஷன்

யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவரான தெய்வேந்திரம் டினோஷனுக்கு கடந்த ஆண்டு LPL தொடரில் எந்தவொரு போட்டியிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வலதுகை மித வேகப் பந்துவீச்சாளராகவும் வதுகை துடுப்பாட்ட வீரராகவும் விளையாடும் இவர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘சுப்பர் ப்ரொவென்ஷியல்’ கிரிக்கெட் போட்டித் தொடரில் தம்புள்ளை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

முன்னதாக 2018இல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான போட்டித் தொடரில் வட மத்திய மாகாண அணிக்காக விளையாடிய அவர், அரைச்சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடருக்குப் பிறகு அதிகமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத டினோஷனுக்கு இம்முறையும் ஜப்னா அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

>> முதல் LPL பட்டத்தை குறிவைத்துள்ள கோல் கிளேடியேட்டர்ஸ்

குறிப்பாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 19 வயதின்கீழ் பிரிவு 2 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கீழ் 2 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், ஒரு சதத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, அவருக்கு இறுதிப் பதினொருவர் அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தாலும், இலங்கை மற்றும் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ரட்னராஜா தேனுரதன்

இலங்கை இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரட்னராஜா தேனுரதன், இந்த ஆண்டு LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இராணுவ பிரீமியர் லீக் T20 தொடரில் விளையாடியிருந்த அவர், 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரரான இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளராக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை இராணுவ கிரிக்கெட் அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற தேனுரதன், அந்த அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேராவுடன் இராணுவ கிரிக்கெட் அணியின் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ள தேனுரதனுக்கு இம்முறை LPL தொடரில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொஹமட் சமாஸ்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் வீரர் மொஹமட் சமாஸ், LPL தொடரில் முதல் முறையாக கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

20 வயதான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸ், தற்போது முவர்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றதுடன், இதுவரை 5 முதல்தர போட்டிகளிலும், 12 லிஸ்ட் A போட்டிகளிலும், 3 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு நடைபெற்ற பெரும்பாலான உள்ளூர் போட்டிகளில் சமாஸ் விளையாடிய போதிலும், அவரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை.

இதேவேளை, இம்முறை LPL தொடரில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ள கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள சமாஸுக்கு, அந்த அணிக்காக குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் என்றாலும், பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க, மொஹமட் ஹபீஸ், பென் டங் உள்ளிட்ட அனுபவ வீரர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கின்ற அரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கவுள்ளது.

மதுஷன் ரவிச்சந்திரகுமார்

கல்கிஸ்ஸ புனித தோமையர் கல்லூரியின் முன்னாள் வீரர் மதுஷன் ரவிச்சந்திரகுமார், இம்முறை LPL தொடரில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

26 வயதுடைய சகலதுறை வீரரான இவர், ஆரம்ப காலத்தில் தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடியிருந்ததுடன். தற்போது செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

கடந்த 2015இல் தமிழ் யூனியன் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அறிமுகமான இவர், இதுவரை 17 முதல்தர போட்டிகளிலும், 24 லிஸ்ட் A போட்டிகளிலும், 20 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரில் கோல்ட்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, உள்ளூர் கழகமட்ட கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வருகின்ற மதுஷனின் விளையாட்டை இலங்கையில் உள்ள ரசிகர்கள் பெரிதளவில் பார்த்தது கிடையாது. இதனால் இம்முறை LPL தொடரில் தம்புள்ள அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் நிச்சயம் அது மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<