LPL தொடரின் போட்டி மத்தியதஸ்தர், நடுவர் குழாம் அறிவிப்பு

Lanka Premier League – 2021

1313

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது லங்காக பிரீமியர் லீக் (LPL) தொடரின் போட்டி மத்தியதஸ்தர் (Match Referee), போட்டி நடுவர்கள் (Umpire) குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) போட்டி மத்தியதஸ்தர் ரஞ்சன் மடுகல்ல மற்றும் போட்டி நடுவர் குமார் தர்மசேன ஆகிய இருவரும் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இந்த ஆண்டு LPL தொடரில் தமது பங்களிப்பினை வழங்கவுள்ளனர்.

இம்முறை LPL தொடரில் ரஞ்சன் மடுகல்ல தலைமையிலான போட்டி மத்தியஸ்தர் குழாத்தில் கிரஹம் லப்ரோய், வென்டல் லப்ரோய் மற்றும் மனோஜ் மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மனோஜ் மெண்டிஸ் உள்ளூர் போட்டி மத்தியஸ்தராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இம்முறை LPL தொடரில் குமார் தர்மசேன தலைமையிலான நடுவர் குழாத்தில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நடுவர் குழாத்தில் குமார் தர்மசேனவுடன் இணைந்து ருச்சிர பல்லியகுருகே, ரவீந்திர விமலசிறி, லின்டன் ஹன்னிபல், பிரகித் ரம்புக்வெல்ல ஆகிய சர்வதேச போட்டி நடுவர்களும் கடமையாற்றவிருக்கின்றனர்.

இவர்கள் தவிர இலங்கையின் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக செயற்படுகின்ற தீபால் குணவர்தன, ஹேமந்த பொதேஜு, கீர்த்தி பண்டார, அசங்க ஜயசூரிய, ரோஹித கொட்டச்சி மற்றும் ரவிந்திர கொட்டச்சி ஆகியோரும் இம்முறை LPL தொடரில் போட்டி நடுவர்களாக செயல்படவுள்ளனர்.

LPL போட்டிகளை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!

LPL தொடரில் பிரதான போட்டி நடுவர்களில் ஒருவராக இருக்கும் குமார் தர்மசேன 2012ஆம், 2018ஆம் ஆண்டுகளில் சிறந்த நடுவருக்காக ஐ.சி.சி. வழங்கும் டேவிட் செப்பர்ட் விருதினை வென்றிருப்பதோடு 2015ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டி மற்றும் அண்மையில் நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத்தில் கள நடுவராக செயல்பட்ட அனுபவத்தினையும் கொண்டிருக்கின்றார்.

இதேவேளை, ரஞ்சன் மடுகல்ல, மொத்தமாக ஐசிசி இன் 8 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LPL தொடரின் இரண்டாவது பருவம் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 26ஆம் திகதி கொழும்பு மற்றும் ஹம்பந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<