தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்

1385

காலியில் வரும் (ஜூலை) 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலை அணித்தலைவராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது. அணித்தலைவர் தினேஷ் சந்திமால் உட்பட அணியின் முடிவுகள் எடுக்கும் குழு இரண்டு டெஸ்ட் போட்டித் தடையை எதிர்கொள்ளவிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

சந்திமாலின் மேன்முறையீடு நிராகரிப்பு; அணித்தலைவராக சுரங்க லக்மால்

பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுக்கு எதிராக …

பந்தின் தன்மையை மாற்றிய விவகாரம் தொடர்பாக சந்திமால் பார்படோஸில் கடந்த வாரம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவர், தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் மேலும் தடைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பந்தின் தன்மையை மாற்றிய விவகாரத்தில் தாம் குற்றமற்றவர் என சந்திமால் கூறியபோதும், நீதி ஆணையாளர் மைக்கல் பெலொப்பினால் அது நிராகரிக்கப்பட்டது.  

அதேபோன்று, போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பில் மூன்றாம் நிலை குற்றத்தை இந்த மூவரும் ஒப்புக்கொண்டனர். செயின்ட் லூசியாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் மைதானத்திற்கு வர மறுத்ததால் இரண்டு மணி நேரம் போட்டி தாமதித்தது. இதன்போது பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் போட்டி அதிகாரிகளிடம் ஆதாரங்கள் கோரப்பட்டது.   

மூன்றாம் நிலை குற்றத்தின் கீழ் குறைந்த பட்ச தண்டனையாக இரண்டு போட்டி தடைகள் விதிக்கப்பட முடியும் என்ற நிலையில் சந்திமால் தென்னாபிரிக்காவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது வரும் ஜூலை 10 ஆம் திகதியே பெலொப் தடை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விதிமுறைகள் படி நாம் அணித்தலைவர் இன்றியே இருப்போம். அவர் எத்தனை போட்டிகள் ஆடமாட்டார் என்பதுவே விடயமாகும். தொடர்ச்சியாக, லக்மாலுடன் நாம் தொடர்ந்து செயற்படவிருக்கிறோம்’ என்று இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் Cricbuzz இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை அணியின் சுற்றுப்பயண விபரம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் …

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதால், பார்படோசில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வென்ற முதல் ஆசிய அணித்தலைவராக லக்மால் பதிவானார்.

இரண்டாவது டெஸ்ட்டின்போது இடம்பெற்ற சம்பவம் குறித்த உள்ளக விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் சபை எதிர்ப்பு வெளியிட்டபோதும், போட்டியை நிறுத்தி வைத்து போட்டி முகாமை தவறான முடிவை எடுத்ததாக ஒப்புக்கொண்டது.   

‘அணி மைதானத்திற்கு திரும்பாதது குறித்து நான் குழப்பமடைந்தேன். மைதானத்திற்கு திரும்பாதது தவறானது. இவ்வாறு நடந்திருக்கக் கூடாது. இரண்டு மணி நேரமாக அணியினர் மைதானத்திற்கு வராததற்கு நாம் வருத்தம் அடைகிறோம். உயர் மட்டத்தில் இருந்து நாம் ஒழுக்கத்தை பேண வேண்டும். போட்டியின் உணர்வை கடைப்பிடிக்கும் கடப்பாடு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ளது’ என்று மேற்கிந்திய தீவுகளில் இருந்து இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியிருந்தார்.

உபாதை காரணமாக மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் தனிப்பட்ட காரணத்திற்காக மேற்கிந்திய தீவுகளில் இருந்து முன்கூட்டியே நாடு திரும்பிய அஞ்செலோ மெதிவ்ஸும் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…