உபாதை காரணமாக கவுண்டி போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்த லக்மால்

174

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சுரங்க லக்மால், தனக்கு ஏற்பட்டிருக்கும் முழங்கை உபாதை காரணமாக 2022ஆம் ஆண்டின் பருவகாலத்திற்குரிய கௌண்டி போட்டிகளில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> பந்துவீச்சில் தொடர்ச்சியாக எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுக்க தவறினோம் – சில்வர்வூட்

இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் டேர்பிஷையர் (Derbyshire) அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சுரங்க லக்மாலிற்கு ஏற்பட்டிருக்கும் முழங்கை உபாதை அவருக்கு மீள்கட்டமைப்பு சத்திரசிகிச்சை ஒன்றினை செய்யும் நிலைமையினை தோற்றுவித்திருப்பதன் காரணமாகவே, அவர் கவுண்டி போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரினை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சுரங்க லக்மால், கடந்த மாதம் லெய்கெஸ்டர்ஷையர் (Leicestershire) அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி கவுண்டி போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட் பிரதியினையும் பதிவு செய்திருந்தார்.

இதன் பின்னர் லக்மாலிற்கு உருவாகிய உபாதை கடந்த வாரம் நடைபெற்ற நொட்டிங்கம்ஷையர் (Nottinghamshire) அணிக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு விளையாடும் வாய்ப்பினை இல்லாமல் செய்திருந்தது. அதேநேரம் தற்போது லக்மால் சத்திரசிகிச்சையினை முகம்கொடுக்கவிருப்பதன் காரணமாக அவரினால், இந்தப் பருவகாலத்திற்காக டேர்பிஷையர் அணி ஆடவுள்ள போட்டிகள் எதிலும் விளையாட முடியாத நிலையும் உருவாகியிருக்கின்றது.

>> முதல் T20I போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி

சுரங்க லக்மால் டேர்பிஷையர் அணியுடன் இரண்டு வருட ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருப்பதன் காரணமாக அணியின் மருத்துவக் குழு சுரங்க லக்மாலிற்கு தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.

இதேநேரம் லக்மாலின் பிரதியீட்டு வீரர் தொடர்பில், டேர்பிஷையர் அணி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், லக்மாலின் இழப்பு டேர்பிஷையர் அணிக்கு பேரிழப்பாக அமைகின்றது என, டேர்பிஷையர் கழகத்தின் கிரிக்கெட் தலைமை அதிகாரியாக காணப்படும் மிக்கி ஆத்தர் குறிப்பிட்டிருக்கின்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<