சமநிலைகளால் ஏமாற்றம் காணும் ரியல் மெட்ரிட்: மன். யுனைடட்டுக்கு அதிர்ச்சித் தோல்வி

82

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் அத்லடிகோ பில்பாவோ

ஆத்லடிகோ பில்பாவோ அணிக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்து ஏமாற்றம் கண்ட ரியல் மெட்ரிட், 2006 மார்ச் மாதத்திற்குப் பின் லா லிகாவில் தொடர்ச்சியாக கோலின்றி சமநிலை முடிவுகளை பெற்றுள்ளது.

பார்சிலோனா, மன்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு முக்கிய வெற்றி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா …….

தனது சொந்த மைதானமான சன்டியாகோ பெர்னபுவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பதில் வீரர்களான நசோ மற்றும் லூகா ஜோவிக் மூலம் முன்னிலை பெற வாய்ப்புகள் கிட்டியபோதும் அவை கைகூடாமல் போயின.

கரீம் பென்சமாவுக்கு ஏமாற்றமான இரவாக அது மாறியது. அவரது ஏழு முயற்சிகள் தோல்வியில் முந்ததோடு அதில் நான்கை எதிரணி கோல்காப்பாளர் யுனை சிமொன் தடுத்தார்.

அத்லடிகோ தனக்கு சாதகமான கோல் வாய்ப்புகளை பெற போராடியது. அந்த அணியின் கெனன் கொட்ரோ-வின் கோல் ஒன்று ஓப் சைட்டாக அனுமதிக்கப்படவில்லை.

இந்தப் போட்டி சமநிலையுற்றதால் அத்லடிகோ ஏழாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்ட நிலையில் ரியல் மெட்ரிட் 2019 ஆம் ஆண்டு முடிவில் லா லிகா புள்ளிப் பட்டியலில் பார்சிலோனாவை விடவும் இரண்டு புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.

முன்னதாக பார்சிலோனாவுக்கு எதிரான போட்டியையும் கோலின்றி சமநிலை செய்த ரியல் மெட்ரிட், வலென்சியா அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமன் செய்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது.

செல்சி எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர்

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு எதிரான ப்ரீமியர் லீக் போட்டியை செல்சி 2-0 என வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் அன்டோனியோ ருடிகரை இலக்குவைத்து நிறவெறி துஷ்பிரயோகம் இடம்பெற்றதான குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் டொட்டன்ஹாம் ரசிகர்களால் ருடிகருக்கு எதிராக அரங்கில் இனவாத நடத்தை வெளிப்படுத்தப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இங்கிலாந்து முதல்நிலை பிரிவில் இவ்வாறான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படுவது இது முதல்முறையாக இருந்தது.

எனினும் போட்டியின் 12 ஆவது நிமிடத்திலேயே வருகை அணியான செல்சியின் வில்லியன் கோல் ஒன்றை பெற்றதோடு, பின்னர் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி வில்லியன் இரண்டாவது கோலையும் பெற முதல் பாதியில் செல்சி 2-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது பாதியில் சொன் ஹியுன் மின், ருடிகன் மீது உதைவிட சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்தே ருடிகனுக்கு எதிராக நிறவெறி நடத்தை பதிவானது.

செல்சி இந்த வெற்றியின் மூலம் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் தனது பிடியை இறுக்கியுள்ளது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் செபீல்ட் யுனைடட்டை விடவும் நான்கு புள்ளிகள் அதிகமான செல்சி பெற்றுள்ளது.

மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட்

ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் அதிர்ச்சித் தோல்வி ஒன்றை சந்தித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 30 க்கு பின்னர் போல் பொக்பா மன்செஸ்டர் அணிக்கு திரும்பிய போட்டியாகவும் இது இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் வாய்ப்புகளை பெறாத நிலையில் இரண்டாவது பாதியில் ஸ்மைலா சார் 50 ஆவது நிமிடத்திலும் ட்ரோய் டீனி 54 ஆவது நிடத்தில் பெனால்டி மூலமும் பெற்ற கோல்கள் மூலம் வட்போர்ட் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் வட்போர்ட் தனது சொந்த மைதானத்தில் 12 போட்டிகளுக்குப் பின் வெற்றியீட்டியுள்ளது. மறுபுறம் 2005 ஆம் ஆண்டுக்குப் பின் மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அணி ஒன்றிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<