பந்துவீச்சில் தொடர்ச்சியாக எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுக்க தவறினோம் – சில்வர்வூட்

Sri Lanka Tour of Bangladesh 2022

692
Silverwood

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பெற்றுக்கொடுத்த ஆரம்பத்தை தக்கவைத்துக் கொண்டு பங்களாதேஷ் அணிக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியாமல் போனது மிகவும் கவலையளிப்பதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அணியில் உள்ள பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு ஒழுக்கத்தை முகாமைத்துவம் செய்தால் அவர்களால் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி திங்கட்கிழமை (23) மிர்பூரில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அணி 7ஆவது ஓவரில் 5ஆவது விக்கெட்டை இழந்தபோது வெறும் 24 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது.

எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் வெளிப்படுத்திய அபார துடுப்பாட்டங்களால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 277 ஓட்டங்களைக் குவித்தது.

நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 253 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியை பலப்படுத்தினர்.

இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய தினம் (24) தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய முஷ்பிகுர் ரஹிம் 175 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல் ஐந்து விக்கெட் குவியலை எடுக்க, அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதனிடையே, முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் கருத்து தெரிவிக்கையில்,

போட்டியின் முதல் நாளில் எமது வேகப் பந்துவீச்சாளர்கள் பெற்றுக்கொடுத்த ஆரம்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு எதிரணிக்கு இன்னும் அதிக அழுத்தத்தைக் கொடுக்க முடியாமல் போனமை தொடர்பில் மிகவும் கவலையடைகிறேன்.

பந்தின் சுழற்சியை (Swing) நாங்கள் அற்புதமாகப் பயன்படுத்தினோம் என்று நினைக்கிறேன், வேகப் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினர். துரதிர்ஷ்டவசமாக, அதன்பிறகு எங்களால் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை. அதன்பின்னர் நாங்கள் எதிரணி வீரர்களுக்கு ஓட்டங்களைக் குவிக்க நிறைய வாய்ப்புகளை வழங்கினோம். பின்னர் நாங்கள் தவறு ஒன்றை செய்தோம். லிட்டன் தாஸின் முக்கிய பிடியெடுப்பொன்றை தவறவிட்டோம். அதுவும் இந்தப் போட்டியில் முக்கிய திருப்புமுனையாக மாறியது.

இதுவொரு நல்ல ஆடுகளம் என்று நான் நினைக்கிறேன். முதல் ஒரு மணி நேரத்தில் பந்து சற்று ஸ்விங் ஆனது. அதேபோல மறுமுனையில் பந்து சற்று சுழல்வதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

அதுமாத்திரமின்றி, போட்டியின் ஆரம்ப சில ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் நன்றாகப் பந்துவீசவில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் அதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். எமது சுழல் பந்துவீச்சாளர்களும் இதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும். இது குறித்து ஓய்வறையில் வைத்து வீரர்களிடம் பேசுவோம். குறிப்பாக அதிக ஓட்டங்களைக் குவிக்கும் வகையில் எமது வீரர்கள் பந்துவீசி இருந்தார்கள் என அவர் தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கிறிஸ் சில்வர்வுட், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை பாராட்டினார்.

எனினும், இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் முழுவதும் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பங்களாதேஷ் வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினர். குறித்த விடயம் தொடர்பில் அவர் பேசுகையில்,

வேகப் பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறார்கள். அணியுடன் நான் பணியாற்றுகின்ற இரண்டாவது போட்டி இதுவாகும். எமது வீரர்களை நான் நன்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறுகிய காலப்பகுதியில் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு ஒழுக்கத்தை நாங்கள் முகாமைத்துவம் செய்ய வேண்டும், இதன் மூலம் அவர்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஓஷத பெர்னாண்டோ 57 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார். இன்று (25) போட்டியின் மூன்றாவது நாளாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<