இந்திய தொடரிலிருந்து வெளியேற்றப்படும் குசல் பெரேரா!

India tour of Sri Lanka 2021

1226

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குசல் பெரேரா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு இடது முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தொடரின் போது, தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்திருந்த குசல் பெரேரா, உபாதையுடன் தொடர் முழுவதும் விளையாடியிருந்தார். இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்திய தொடருக்காக எதிர்பார்க்கப்படும் 5 விக்கெட் காப்பாளர்கள்!

குறிப்பாக அணிக்கான முதல் இரண்டு பயிற்சிகளிலும் குசல் பெரேரா ஈடுபடவில்லை என்பதுடன், சிகிச்சைகளை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குசல் பெரேராவின் உபாதை உறுதிசெய்யப்பட்டு அணியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ள குசல் பெரேரா சுமார் 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்கவேண்டும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குசல் பெரேரா இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார்.

குசல் பெரேரா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தலைவராக செயற்பட்டிருந்த போதும், தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடரின் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், இங்கிலாந்து தொடரின் போது, உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறையை மீறிய குற்றச்சாட்டின் காரணமாக, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, குசல் பெரேரா நீக்கப்பட்டுள்ளதால், புதிய விக்கெட் காப்பாளர் ஒருவரை அணியில் இணைக்கவேண்டிய நிலை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், இலங்கை A மற்றம் வளர்ந்துவரும் அணிகளுக்கான உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் சில விக்கெட் காப்பாளர்கள் பயிற்சிப்பெற்று வருகின்றனர். எனவே அவர்களில் ஒருவர் அல்லது இருவர் இலங்கை அணியுடன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இதேவேளை, பினுர பெர்னாண்டோ இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பிரகாசித்திருந்த போதும், அவரின் உபாதை ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், T20I தொடரில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…