சானகவின் சதத்தினால் லங்கன் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையில்

421

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டு உள்ளூர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் 2 ஆவது வாரத்திற்கான நான்கு போட்டிகள் இன்று (21) ஆரம்பமாகின.

எனினும், இப்போட்டிகளுக்கு சீரற்ற காலநிலையால் இடையூறு ஏற்பட்டிருந்தாலும், லங்கன் கிரிக்கெட் கழகத்தின் சானக ருவன்சிறியின் சதமும், பாணந்துறை விளையாட்டுக் கழகத்தின் கசிஃப் நவீடின் அரைச் சதமும் இன்றைய நாள் ஆட்டங்களில் முக்கிய இடத்தை வகித்தன.

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விமானப்படை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு வழங்கியது.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய லங்கன் கிரிக்கெட் கழகம், முதல் இன்னிங்சுக்காக 70 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய வலதுகை துடுப்பாட்ட வீரரான சானக ருவன்சிறி சதத்தைப் பூர்த்தி செய்ததுடன், ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார். அத்துடன், மதுரங்க சொய்சா (74) மற்றும் லக்‌ஷான் ரொட்ரிகோ (53) ஆகியோர் அரைச் சதம் கடந்து அவ்வணிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.

19 வயதின் கீழ் சிங்கர் பாடசாலைகள் கிரிக்கெட் – மூன்றாம் தவணை குறித்த பார்வை

பந்துவீச்சில் விமானப்படை அணி சார்பாக லக்‌ஷான் பெர்ணாந்து மற்றும் புத்திக சந்தருவன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து கடைசி நேரத்தில் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய விமானப்படை அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி  8 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) –  349 (70) –  சானக ருவன்சிறி 120*, மதுரங்க சொய்சா 74, லக்‌ஷான் ரொட்ரிகோ 53, கீத் குமார 43, ஷஷீன் பெர்னாண்டோ 31, லக்‌ஷான் பெர்னாண்டோ 3/69, புத்திக சந்தருவன் 3/81, கயான் டி சில்வா 2/54,  சொஹான் ரங்கிக்க 2/63

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 08/0 (1.1)


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர விளையாட்டுக் கழகம்

கஷிஃப் நவீடின் அரைச் சதத்தின் உதவியுடன் பாணந்துறை விளையாட்டு கழகத்தால் களுத்துறை நகர அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான ஓட்டங்களைப் பெற முடிந்தது.  

பண்டாரகம பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாணந்துறை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

களுத்துறை நகர அணி ஆரம்பம் முதல் பந்துவீச்சில் பாணந்துறை அணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தனர். எனினும் அவ்வணி சார்பாக நிதானமாக துடுப்பெடுத்தாடிய கஷிஃப் நவீட் அரைச் சதம் கடந்து அவ்வணியை சரிவிலிருந்து மீட்டார். மறுபுறத்தில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள விஷ்வ சத்துருங்க 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியின் எதிர்காலதிற்கான ஹத்துருசிங்கவின் திட்டம்

எனினும், இன்றைய போட்டிக்கு சீரற்ற காலநிலையால் பாதிப்பு ஏற்பட்டதுடன், பாணந்துறை அணி முதல் இன்னிங்சுக்காக 65.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 161/4 (65.2) – கஷிஃப் நவீட் 54*, விஷ்வ சத்துருங்க 30, ஷ்ஷ்ரிக்க புசேகொல்ல 20, சாமிக சன்சக 18, எரங்க ரத்னாயக்க 1/12


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

மொறட்டுவை டி சொய்சா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கடற்படை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடிய போதிலும், சீரற்ற காலநிலையால் வெறுமனே 33 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டதுடன், இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த கடற்படை விளையாட்டுக் கழகம் முதல் மணித்தியாலத்தில் 4 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 77/4 (33) – தினூஷ பெர்ணாந்து 2/07


காலி கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

30.1 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு சீரற்ற காலநிலையால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிரிக்கெட் கழகத் தலைவர் தமித ஹுனுகுபுர முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், இன்றைய நாள் முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஒரு நாள் போட்டித் தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பாக துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது ஸ்ரீஹன் அநுருத்திக 38 ஓட்டங்களையும், அகில் இன்ஹாம் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 97/1 (30.1) – ஸ்ரீஹன் அநுருத்திக 38*, பிரவீன் பெர்ணாந்து 30, அகீல் இன்ஹாம் 27*

நாளை போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.