குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக இலங்கை அணியில் குசல் மெண்டிஸ்

1026

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா, தொடையில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குசல் பெரேரா விளையாடுவது சந்தேகம்

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் …

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த சனிக்கிழமை (13) தம்புள்ளையில் இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் தனது பின் தொடைப் பகுதியில் குசல் ஜனித் பெரேரா உபாதைக்கு ஆளாகியிருந்தார். இதனால், இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்டிருந்தது.

இதேவேளை, பெரேரா தொடர்பான இறுதி முடிவு அவரின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னரே வெளியிடப்படும் எனவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது. இப்படியானதொரு நிலையிலேயே, குசல் ஜனித் பெரேரா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளார் என்கிற செய்தி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவின் இழப்பு இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரில், இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும்.

இதேநேரம், குசல் ஜனித் பெரேராவின் இடத்தினை இலங்கை அணியில் நிரப்ப குசல் மெண்டிஸ் அழைக்கப்பட்டிருக்கின்றார். இந்த ஆண்டு, ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பதிவுகள் எதனையும் மெண்டிஸ் வைக்காத போதிலும் இம்முறை தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி ஒரு நாள் அணியில் நிரந்தர இடம் ஒன்றினை பிடிக்க முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது போட்டியில் அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர் – சந்திமால்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான …

ஐந்து போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரில், இரண்டு போட்டிகள் நிறைவடைந்து அதில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் இருக்கின்ற இத்தருணத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று பல்லேகலேயில் இடம்பெறுகின்றது.