இலங்கை கிரிக்கெட் அனுபவ வீரரும், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரருமான குசல் மெண்டிஸுக்கு இங்கிலாந்தின் கவுண்டி சம்பியன்ஷிப்பில் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக குறுகிய காலத்திற்கு விளையாடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக Newswire.lk இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல்களின்படி, நாட்டிங்ஹாம்ஷையர் அணியுடனான தனது பணியை சமீபத்தில் முடித்துக் கொண்ட இந்திய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஈஷான் கிஷனுக்கு மாற்றீடு வீரராக குசல் மெண்டிஸை அணியில் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எது எவ்வாறாயினும், வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்கும் தேசிய அணி வீரர்களுக்கான வழக்கமான நடைமுறையின்படி, குசல் மெண்டிஸ் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதி தேவைப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியிருந்தாலும், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் ஒருவர் கவுண்டி அணிக்காக ஓப்பந்தம் செய்யப்படுவதோ அல்லது விளையாடுவதோ ஒரு அரிதான விடயமாகும்.
- இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் ஆகஸ்டில்?
- வர்த்தக சம்மேளன ஒருநாள் தொடருக்கு நீடிக்கும் இலங்கை கிரிக்கெட்டின் ஆதரவு
- T20I தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ்
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இலங்கை தேசிய அணிக்காக விளையாடி வருகின்ற வழக்கமான ஒரு வீரரான குசல் மெண்டிஸ், அண்மையில் நிறைவடைந்த பங்களாதேஷ் தொடரில் கடைசியாக விளையாடினார்.
துணைக் கண்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கவுண்டி போட்டிகளில் சிவப்பு நிறப் பந்துகளில் விளையாடுவது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுப்பது மாத்திரமல்லாமல், இங்கிலாந்து ஆடுகளங்களை அறிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அமைகின்றது.
எனவே, குசல் மெண்டிஸின் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், கவுண்டி சம்பியன்ஷிப்பில் விளையாடிய இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் குறுகிய பட்டியலில் இணைவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
இதேவேளை, நாட்டிங்ஹாம்ஷையர் அல்லது இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<