அன்று மஹேல சதம், நேற்று சங்கா சதம்

4785

இங்கிலாந்தின் கவுண்டி அணிகளுக்கு இடையில் நடைபெறும் ரோயல் – லண்டன் கிண்ணத்தின் 3ஆவது காலிறுதிப் போட்டி நோர்த்தாம்டனின் கவுண்டன் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் நோர்த்தம்டன்ஷைர் மற்றும் சரே அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த்தம்டன்ஷைர் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானித்தது.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த்தம்டன்ஷைர் அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. இந்த அணி சார்பாக ரொறி கெளங்கவேள்ட் ஆட்டம் இழக்காமல் 76 ஓட்டங்களையும் (7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக) ஜோஸ் கொப் 66 ஓட்டங்களையும் (7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக) தலைவர் அலெக்ஸ் வெக்கலி 45 ஓட்டங்களையும் (4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக) பெற்றனர். சரே அணியின் பந்து வீச்சில் ஜெட் ட்ரென்பேட்ச் 4 விக்கட்டுகளை வீழ்த்த டொம் கரண் மற்றும் ஸ்டூவர்ட் மேக்கர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

பின் அரையிறுதில் இடம் பிடிக்க 277 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய சரே அணி இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சங்காவின் உதவியோடு 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்று 1 விக்கட்டால் வெற்றியைப் பதிவு செய்தது. சரே அணி சார்பாக குமார் சங்கக்கார மிக மிக அற்புதமாக விளையாடி 115 பந்துகளை முகம் கொடுத்து 208 நிமிடங்கள் மைதானத்தில் நின்றாடி 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 130 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார். இவரைத் தவிர ஜேசன் ரோய் 42 ஓட்டங்களையும் சம் கரன் 26  ஓட்டங்களையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் சரே அணி ரோயல் – லண்டன் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நோர்த்தம்டன்ஷைர் அணியின் பந்துவீச்சில் க்ரெஹெம் வயிட் மற்றும் ஜோஸ் கொப் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தி இருந்தார்கள்.

போட்டியின் சுருக்கம்

நோர்த்தம்டன்ஷைர் – 276/10 (49)
ரொறி கெளங்கவேள்ட் 76*, ஜோஸ் கொப் 66, அலெக்ஸ் வெக்கலி 45
ஜெட் ட்ரென்பேட்ச் 39/4, டொம் கரண் 69/2, ஸ்டூவர்ட் மேக்கர் 40/2

சரே – 279/9 (50)
குமார் சங்கக்கார 130*, ஜேசன் ரோய் 42, சம் கரன் 26
க்ரெஹெம் வயிட் 46/2, ஜோஸ் கொப் 28/2

சரே அணி 1 விக்கட்டால் வெற்றி