“வடக்கு, கிழக்கு வீரர்கள் திறமையானவர்கள்” – குமார் சங்கக்கார

54
@Namal Rajapaksa Facebook

வடக்கு கிழக்கில் மிக திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்புகளும், வசதிகளும் சரியாக கிடைக்கப்பெறவில்லை என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.சி.சியின் தலைவருமான குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார்.

>> வடக்கு, கிழக்கில் பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி செய்யப்படவில்லை – மஹேல குற்றச்சாட்டு

ஹோமாகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதா? இல்லையா? என்பதை கருத்திற்கொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே சங்கக்கார குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட குமார் சங்கக்கார, “பாடசாலை கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் சபை நடத்தும் தொடர்களை மேலும் வலுப்படுத்த தவறுவதுடன், அதற்கான வசதிகள், ஆடுகள வசதிகள் என்வற்றை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் எம்மால் பலமான தேசிய அணியொன்றை உருவாக்குவது கடினம். 

தற்போது கிரிக்கெட் சபை நடத்தும் தொடர்களை பார்க்கும் போது, அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை எம்மால் அறிய முடிகின்றது. இதில் விஷேடமாக கிரிக்கெட் சபை தலைவர் சம்மி சில்வா குறிப்பிட்டது போன்று, எமது உள்ளூர் அணிகள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிய அனுபவம் இல்லை. 

அதேநேரம், சில அணிகளுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான வசதிகளை கொண்ட மைதானம் கூட இல்லை. இதுபோன்ற உள்ளார்ந்த தேவைகளை நிவர்த்திசெய்வதற்கு  அதிகமான பணம் தேவைப்படும்” எனத் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த குமார், அதுமாத்திரமின்றி, யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கில் நற்குண முன்னேற்ற அமைப்பு நான்கு மைதானங்களை அமைத்திருந்தது. இதன்போது, யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், புதிய புற்தரை ஆடுகளம் (Turf) ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது.   

குறித்த ஐந்து, ஆறு வருடங்களில் நாம் நடத்திய மிகச்சிறந்த 23 அணிகளை கொண்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரின் போது, மிகச்சிறந்த திறமை வாய்ந்த வீரர்களை வடக்கு கிழக்கில் காணக்கூடியதாக இருந்தது. எனினும், அங்கிருக்கும் வீரர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் குறைவாகவே கிடைக்கிறது” என்றார். 

இதேவேளை, முன்னாள் வீரர்கள் மற்றும் பிரதமருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஹோமாகமவில் அமைக்கப்படவிருந்த மைதானம் தற்போது தேவையில்லை எனவும், உள்ளூர் மற்றும் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கும், திறமையான வீரர்களை கண்டறிவதற்கும் குறித்த நிதியை செலவிட முடியும் எனவும் முன்னாள் வீரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<