அபார வெற்றியைப் பெற்ற புனித ஜோசெப் வாஸ் கல்லூரி காலிறுதிக்கு தெரிவு

590
U19 Kotmale Chox

இன்று (செப்.27) இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ”கொத்மலே சொக்ஸ்” கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதியில் களுத்துறை ஹோலி க்ரொஸ் கல்லூரி அணியை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டதன் மூலம் வென்னப்புவ புனித ஜோசெப் வாஸ் கல்லூரி அணி அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.  

ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகளில் குழு ”சீ” யில் போட்டியிட்ட களுத்துறை ஹோலி க்ரொஸ் கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்து குழு நிலையில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அதேபோன்று, குழு ”பி” யில் அங்கம் வகித்த வென்னப்புவ புனித ஜோசெப் வாஸ் கல்லூரி அணியும், தாம் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்து குழு மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

எனினும் முதல் சுற்றில் தமது குழுவில் பலம் வாய்ந்த பல அணிகளுடன் மோதிய ஒரு அணியாக ஹோலி க்ரொஸ் கல்லூரி அணி திகழ்ந்தமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஒரு விடயமாகும்.  

இந்நிலையில், இன்று மாலை கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் ”கொத்மலே சொக்ஸ்” தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்றது.

போட்டி ஆரம்பிக்கப்பட்டது முதல் இரு அணிகளும் சம அளவில் தமது ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன. 27ஆவது நிமிடத்தில் புனித ஜோசெப் அணி கோல் பெறுவதற்கான ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டது. எனினும் அதனை ஹோலி க்ரொஸ் அணியின் கோல்காப்பாளர் பாய்ந்து சிறந்த முறையில் தடுத்தார்.

பின்னர் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் புனித ஜோசெப் அணி வீரர் அஷேன் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுக்க, அவ்வணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 37ஆவது நிமிடத்தில் ஹோலி க்ரொஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. அந்த பெனால்டி உதையை பெறுவதற்கு ஹோலி க்ரொஸ் அணியின் கோல்காப்பாளர் மலின்த அழைக்கப்பட்டார். போட்டியை சமப்படுத்துவதற்கான கோலை மலின்த பெற்றுக்கொடுப்பார் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் அந்தப் பந்தை கம்பத்திற்கு வெளியே உதைந்து தமது அணிக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.

அதன் பின்னர் முதல் பாதியில் எந்த அணிகளும் வேறு கோல்களைப் பெறவில்லை.

முதல் பாதி: புனித ஜோசெப் வேஸ் கல்லூரி (1) – (0) ஹோலி க்ரொஸ் கல்லூரி

பின்னர் ஆரம்பமான இரண்டாவது பாதியின் முதல் சில நிமிடங்களுக்கு புனித ஜோசெப் அணியினரே ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 51ஆவது நிமிடத்தில் புனித ஜோசெப் அணி வீரர், கவின் சிறந்த முறையில் எதிரணி வீரர்கள் பலரை தாண்டி பந்தை எடுத்துச் சென்று, இறுதியாக கோல்காப்பாளரையும் தாண்டிச் சென்று கோல் ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் 54ஆவது நிமிடத்தில் புனித ஜோசெப் அணியினருக்கு பெனால்டி ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்போது அவ்வணியின் மற்றொரு வீரரான பிதுஷான் பெனால்டி உதையை கோலாக்கினார். எனவே போட்டியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் புனித ஜோசெப் அணி முன்னிலை பெற்றது.

எனினும் போட்டியின் 60ஆவது நிமிடத்தின் பின்னர் ஹோலி க்ரொஸ் அணி வீரர்கள் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 65ஆவது நிமிடத்தில் ஹோலி க்ரொஸ் அணி வீரர் தினேத் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுக்க, அடுத்த 3 நிமிடங்களில் அவ்வணியின் உதார மற்றொரு கோலைப் பெற்றுக்கொடுத்தார். எனவே ஆட்டம் மிகவும் சூடு பிடித்தது.

இரு அணியினருக்கும் இடையில் ஒரு பாரிய போராட்டம் நடக்க, போட்டியின் 82 நிமிடங்கள் கடந்த நிலையில், புனித ஜோசெப் அணி வீரர் தெவிந்த அவ்வணிக்கான நான்காவது கொலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் 90 நிமிடங்கள் கடந்த நிலையில் புனித ஜோசெப் வாஸ் அணிக்கு ஔன் கோல் மூலம் மற்றொரு கோல் கிடைத்தது.  ஹோலி க்ரொஸ் அணி வீரர் திவன்தவின் காலில் பட்ட பந்து அவ்வணி கோல்காப்பாளரைத் தாண்டி கோல் கம்பங்களுக்குள் சென்றதனால் அவர்கள் எதிரணிக்கு ஒரு கோலை தாமாகவே வழங்கினர்.

எனவே போட்டியில் மேலதிக மூன்று கோல்களினால் புனித ஜோசெப் வாஸ் அணி வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியது.

முழு நேரம்: புனித ஜோசெப் வாஸ் கல்லூரி (5) – (2) ஹோலி க்ரொஸ் கல்லூரி

புனித ஜோசெப் வாஸ் கல்லூரி

அஷேன் (30), கவின் (51), பிதுஷான் (54), தெவிந்த (83), திவன்த (91)

ஹோலி க்ரொஸ் கல்லூரி 

தினேத் (65), உதார (68)

Thepapare.com இன் சிறந்த வீரர் : பிதுஷான் பெர்னான்டோ (புனித ஜோசெப் வாஸ் கல்லூரி)