IPL தொடரிலிருந்து விலகினார் கேஎல் ராகுல்

Indian Premier League 2023

238
Indian Premier League 2023

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது தொடைப் பகுதியில் காயத்துக்குள்ளாகிய லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைவர் கேஎல் ராகுல், IPL தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

மேலும், ஜுன் மாதம் அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெறவுள்ள ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலிருந்தும் அவர் விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL தொடரில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்ட இந்தப்போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடிய போது பௌண்டரி எல்லைக்குச் சென்ற பந்தை தடுக்க முயன்ற கேஎல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

எவ்வாறாயினும், காயம் காரணமாக கேஎல் ராகுல் ஆரம்ப வீரராகவும் களமிறங்கவில்லை. லக்னோ அணியின் 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பின்னரே அவர் மைதானத்திற்குள் வந்தார். எனினும், 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 108 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், கேஎல் ராகுலின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்திருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளதுடன், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் Scan முடிவுகளின் அடிப்படையிலேயே அறுவை சிகிச்சை செய்வது குறித்து இறுதி முடிவு செய்யப்படும்.

இந்த சூழ்நிலையில் கேஎல் ராகுல் தனது இன்ஸ்டகிராம் பதிவில், ‘அடுத்த மாதம் ஓவல் மைதானத்தில் இந்திய அணியுடன் இருக்க மாட்டேன். ஆனால் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நீள நிற ஜேர்சி அணிந்து அணிக்கு திரும்பி நாட்டுக்காக விளையாடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் IPL, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. தற்போது IPL தொடரில் இருந்து விலகி மும்பை சென்றுள்ள ராகுல், அங்கு Scan உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முடிவை பொறுத்தே கேஎல் ராகுல் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பது பற்றி தீர்மானிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்முறை IPL தொடரில் கேஎல் ராகுல் லக்னோ அணிக்கு துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பங்களிப்புச் செய்யாவிட்டாலும், தலைவராக அவர் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இந்த நிலையில், அவரது திடீர் விலகல் லக்னோ அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர். எனவே, IPL தொடரிலிருந்து விலகிய ராகுலுக்குப் பதிலாக க்ருணல் பாண்டியா லக்னோ அணியின் தலைவராக செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளரான ஜெயதேவ் உனத்கட், பயிற்சியின்போது காயமடைந்தார். இவர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். எனவே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் விளையாட இருந்த இந்த 2 வீரர்கள் தற்போது காயமடைந்திருப்பது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த இவர்கள் இருவரும் லக்னோ அணியில் உள்ளதால், அந்த அணிக்கும் தற்போது பின்னடைவை ஏற்பட்டுள்ளது. தற்போதையை நிலையில் லக்னோ அணி 10 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி, 4இல் தோல்வியுடன் 11 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<