34 வயதில் உலக மெய்வல்லுனர் நட்சத்திரங்களாக மகுடம் சூடிய கறுப்பின வீரர்கள்

99
Image courtesy - IAAF official Facebook

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் இவ்வருடத்துக்கான அதிசிறந்த வீரருக்கான விருதை கென்யாவின் மரதன் ஓட்ட வீரரான எலியுட் கிப்சொக் பெற்றுக்கொள்ள, அதிசிறந்த வீராங்கனைக்கான விருதை கொலம்பியாவைச் சேர்ந்த நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் வீராங்கனையான கெத்தரின் இபர்குவென் தட்டிச் சென்றார். இவ்விரண்டு வீரர்களும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

2018 IAAF சிறந்த மெய்வல்லுனர் வீரர் விருது – ஆடவர் இறுதிப் பட்டியல்

2018 ஆம் ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீரர்களை கௌரவிக்கும்……

2018 ஆம் ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று (05) நடைபெற்றது.

இதில் வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதை கென்ய நாட்டைச் சேர்ந்த 34 வயதான மரதன் ஓட்ட வீரரான எலியுட் கிப்சொக் பெற்றுக் கொண்டார்.

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பெர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலம் 01:39 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை படைத்த எலியுட் கிப்சொக், 1967ஆம் ஆண்டுக்குப் பின்னர் மரதன் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டப்பட்ட மிகப் பெரிய உலக சாதனையாகவும் இது பதிவாகியது.

2016 றியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற லண்டன் மரதனிலும் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், பெண்கள் பிரிவில் கொலம்பியாவைச் சேர்ந்த 34 வயதுடைய நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் வீராங்கனையான கெத்தரின் இபர்குவென் வருடத்தின் அதிசிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சலில் முன்னிலை வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற கெத்தரின், இவ்வருடம் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் கண்டங்கள் கிண்ணம், டயமண்ட் லீக் சம்பியன்ஷிப் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றார். அவருடைய சிறந்த தூரமாக 14.96 மீற்றர் பதிவாகியுள்ளது.

2018 IAAF சிறந்த மெய்வல்லுனர் விருது – பெண்கள் இறுதிப் பட்டியல்

2018 ஆம் ஆண்டில் திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீரர்களை கௌரவிக்கும்……

அத்துடன், இவ்வருடம் நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளில் மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் சம்பியன் மற்றும் டயமண்ட் லீக் பட்டங்களையும் வென்ற அவர், 2016 றியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, வருடத்தின் வளர்ந்துவரும் மெய்வல்லுனர் வீரர்களுக்கான விருதை ஆண்கள் பிரிவில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 19 வயதுடைய கோலூன்றிப் பாய்தல் வீரரான அர்மன்ட் டுப்ளன்டிஸ் பெற்றுக்கொள்ள, பெண்கள் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த 400 மீற்றர் சட்டவேலி ஓட்ட வீராங்கனையான சிட்னி மெக்லாக்லின் பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<