முதல் முறையாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ICC உலகக் கிண்ணம்

ICC Men's Cricket World Cup 2023

124

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 100 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ICC மற்றும் BCCI என்பன இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.  

10 அணிகள் பங்கேற்கும் 13ஆவது ICC ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை செவ்வாய்க்கிழமை (27) உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, உலகக் கிண்ண இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் சென்னையில் நடைபெறலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது மும்பை வான்கடே மற்றும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானங்கள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவையும் (ICC), இந்திய கிரிக்கெட் சபையும் (BCCI) புதிய முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது இங்கிலாந்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘stratosphere’ பலூன் மூலம் உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தை விண்வெளிக்கு அனுப்பியது. அது பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் நிலை நிறுத்தப்பட்டது. உறைபனிக்கும் கீழான, மைனஸ் 65 பாகை செல்சியஸ் வெப்பநிலையில், பூமியின் வெளிவட்டப் பாதைக்கு அருகில் வெற்றிக் கிண்ணம் ஜொலிப்பதை அதில் பொருத்தப்பட்டிருந்த ‘4k’ தொழில்நுட்ப கெமரா பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அந்தரத்தில் மிதந்த உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது விளையாட்டு வெற்றிக் கிண்ணம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒருநாள் உலகக் கிண்ணம் இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, குவைத், பஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இத்தாலி, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என சுமார் 18 நாடுகளுக்கு, 40க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இறுதியாக மீண்டும் கிண்ணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் எதிர்வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் உலகக் கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடர்பில் பிசிசிஐ இன் செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது. ஆறு வாரங்கள் உலகின் 10 சிறந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். உலகக் கிண்ணத் தொடருக்கான கவுண்ட் டவுன் ஆரம்பமாக உள்ள நிலையில் உலகக் கிண்ண சுற்றுப்பயணம் பல நாட்டு ரசிகர்களை இதன் அங்கமாக மாற்ற செய்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<