பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இலங்கை அணி எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டித் தொடருக்கான திருத்தியமைக்கப்பட்ட போட்டி அட்டவணை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று(06) வெளியிட்டது.
[rev_slider LOLC]
சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, முதற்தடவையாக 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷுக்கு எதிரான T-20 தொடரில் மெதிவ்ஸின் தலைமைப் பதவி சந்திமாலுக்கு
இதன் முதல் டெஸ்ட் போட்டி ஜுன் மாதம் 06ஆம் திகதி ட்ரினிடாட்டிலும், 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டிகள் சென். லூசியா மற்றும் பார்படோஸில் முறையே 14ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
முன்னதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை கடந்த டிசம்பர் மாதம் இப்போட்டி தொடரின் முழுமையான அட்டவணையை வெளியிட்டிருந்தது. இதில் 2ஆவது டெஸ்ட் போட்டி பார்படோஸிலும், 3ஆவது டெஸ்ட் போட்டி சென். லூசியாவிலும் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க போட்டி நடைபெறும் மைதானங்கள் மாற்றியமையக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பார்படோஸிலுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் முதற்தடவையாக இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. அந்த மைதானத்தில் நடைபெறுகின்ற 2ஆவது டெஸ்ட் போட்டியாகவும் அது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது அமையவுள்ளதுடன், இலங்கை அணி பங்கேற்கும் 2ஆவது பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் பதிவாகவுள்ளது. முன்னதாக கடந்த வருடம் பாகிஸ்தான் அணியுடன் தமது முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை அணி, குறித்த போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்தது.
அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணி முன்னதாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இலங்கை அணி 4ஆவது தடவையாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 3 டெஸ்ட் தொடர்களிலும் 6 போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை அணி வெற்றியைப் பதிவுசெய்தது. 3 தோல்வியையும், 2 போட்டிகள் சமநிலையிலும் நிறைவுக்கு வந்தன. இறுதியாக கடந்த 2008ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்திய இலங்கை அணி, முதற்தடவையாக அந்ந நாட்டில் வரலாற்று டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்தது.
நோதம்டன்ஷெயார் அணிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்த சீக்குகே பிரசன்ன
எனினும், இறுதியாக 2015ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. அதில் 2-0 என இலங்கை அணி வெற்றியைப் பதிவுசெய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனினும், கடந்த வருடம் இலங்கை ஏ அணி மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இதில் 4 நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் தொடரை தனன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை ஏ அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
- பயிற்சிப் போட்டி – மே மாதம் 30 முதல் ஜுன் முதலாம் திகதி வரை (பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம்)
- முதல் டெஸ்ட் போட்டி – ஜுன் மாதம் 6 முதல் 10 வரை (குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானம்)
- இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜுன் 14 முதல் 18 வரை (டெரன் சமி கிரிக்கெட் மைதானம்)
- மூன்றாவது டெஸ்ட் போட்டி (பகலிரவு டெஸ்ட்) – ஜுன் 23 முதல் 27 வரை (கெனிங்டன் ஓவல் மைதானம்)