பெளன்சர் பந்து தாக்குதலுக்கு உள்ளான கருணாரத்ன வைத்தியசாலையில்

960

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன, கென்பராவில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் பெளன்சர் பந்து ஒன்றினால் தாக்கப்பட்டதனை அடுத்து உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இன்றைய (2) இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிக் கொண்டிருந்த கருணாரத்ன தனது அரைச்சதத்தினை (46*) நெருங்கிய போது வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் வீசிய பெளன்சர் பந்து ஒன்றில் இருந்து தப்பிப்பதற்காக கீழே குனிவதற்கு முற்பட்டிருந்தார்.

திமுத் கருணாரத்னவின் மோசமான உபாதையால் இலங்கைக்கு பின்னடைவு

கருணாரத்ன கீழே பணிய முற்பட்ட போது கம்மின்ஸ் வீசிய பெளன்சர் பந்து அவரது வலது தோற்பட்டையை தாக்குவது போல் தெரிந்தது. எனினும், போட்டியை பதிவு செய்த கெமரா ஒன்றில் பார்த்த போது  கருணாரத்னவின் கழுத்தின் பின் பக்கத்தில் பந்து பலமாக அடிபடுவது அவதானிக்கப்பட்டிருந்தது.

பின்னர், பந்து தாக்கிய மறுகணத்திலேயே கருணாரத்ன மைதானத்தில் சுருண்டு விழுந்ததுடன், மைதானத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் அவரை நோக்கி குழுமினர். சிறிது நேரத்தில் அவுஸ்திரேலியா  – இலங்கை ஆகிய இரு அணிகளதும் வைத்திய உதவியாளர்களும், வீரர்களும் மைதானத்திற்குள் வர போட்டி சிறிது நேரம் தாமதித்திருந்தது. மைதானத்திற்குள் வந்த வைத்திய உதவி அதிகாரிகள் உடனடியாக கருணாரத்னவிற்கு தேவையான  முதலுதவிகளை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து இலங்கை அணியின் பதில் வீரரான ரொஷேன் சில்வா மூலம் கருணாரத்னவின் கிரிக்கெட் உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்டது. சிறிது நேரத்தில் வைத்திய உதவி வாகனம் மைதானத்திற்குள் வர கருணாரத்ன பாதுகாப்பு கழுத்துப்பட்டி ஒன்று அணிவிக்கப்பட்டு மிகவும் அவதானமான முறையில் மருத்துவப்படுக்கையில் (Stretcher) ஏற்றப்பட்டார். இதனை அடுத்து கருணாரத்ன தான் சுருண்டு விழுந்த கணத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 நிமிடங்களின் பின்னர் வைத்திய உதவியாளர்களுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அதிர்ஷ்டவசமாக கருணாரத்னவின் விரல்கள் அசைவதனையும், அவர் வைத்திய உதவியாளர்களுடன் பேச முற்படுவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. கருணாரத்ன  வைத்தியசாலைக்கு மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது டெஸ்ட் போட்டியின் பார்வையாளர்கள் அனைவரும் கருணாரத்ன சுகம் பெறும் நோக்கத்தோடு கரகோசம் செய்து அவரை வழியனுப்பி வைத்திருந்தனர்.

மைதான நிர்வாகிகள் வைத்திய உதவி வாகனத்தில் இருந்து கருணாரத்ன (வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக) ஆம்புலன்ஸ் வண்டிக்கு மாற்றப்படும் போது அவரது கண்கள் விழிப்பு நிலையில் இருந்ததை உறுதி செய்திருந்தனர். கருணாரத்ன வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படும் போது போட்டியை பார்க்க வந்திருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அவருடன் பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருணாரத்ன மைதானத்திற்குள் சுருண்டு விழுந்திருந்த தருணத்தில் அவரை நோக்கி பெளன்சர் பந்தினை வீசிய பெட் கம்மின்ஸ் மிகவும் வருத்தத்தோடு இருந்ததோடு, அவுஸ்திரேலிய அணியின் தலைவரான டிம் பெயினும் கவலையுடன் காணப்பட்டிருந்தார். இதேநேரம், ஏனைய அவுஸ்திரேலிய வீரர்களும் கருணாரத்னவின் உடல் நிலை குறித்து அடிக்கடி வைத்திய உதவி அதிகாரிகளிடம் விசாரித்த வண்ணம் இருந்தனர். அவுஸ்திரேலியா போன்று இலங்கை அணி வீரர்களும் கருணாரத்னவிற்காக மிகவும் வருத்தமான நிலையில் காணப்பட்டிருந்தனர்.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் கருணாரத்ன பாரிய உடல் உபாதைகளிலிருந்து தப்பித்திருப்பதாக கூறப்படுகின்றது. எனினும், அவரது உடல் நிலை தொடர்பான முழுமையான தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

கனிஷ்ட கிரிக்கெட் தெரிவுக் குழுவில் பர்விஸ் மஹ்ரூப்புக்கு முக்கிய பதவி

கருணாரத்ன தொடர்பில் தற்போது நல்ல தகவல்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விடயம் என்ற போதிலும் அவருக்கு பெளன்சர் பந்து தாக்கியது,  அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் பில் ஹக்ஸிற்கு, சீன் எப்போட் என்ற வேகப்பந்து வீச்சாளர் வீசிய பெளன்சர் பந்து தாக்கி அவர் உயிரிழந்த கொடூர சம்பவத்தினை ஞாபகமூட்டியிருந்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன மிகவும் விரைவாக குணமடைந்து தனது தாய்நாட்டுக்காக மீண்டும் விளையாட ThePapare.com ஆகிய நாங்களும் பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றோம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<