T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் இலங்கைக்கு முதல் சவால்

687

T20 உலகக் கிண்ணத் தொடரினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் முதல் சர்வதேச தொடராக இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் அமைகின்றது.

ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடையினைப் பெறும் சாமிக்க கருணாரட்ன

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) ஒருநாள் சுபர் லீக்கினுள் அடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் வெள்ளிக்கிழமை (25) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

ஒருநாள் சுபர் லீக் களநிலவரம்

இலங்கை

இந்தியாவில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு முக்கியமாக ஒருநாள் சுபர் லீக் தொடரின் போட்டிகள் அமைகின்றன.

எனவே ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர் இலங்கை அணிக்கு மிக முக்கியமாக அமைகின்றது. இந்த ஒருநாள் சுபர் லீக்கில் மொத்தமாக 18 போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அதில் 6 வெற்றிகளை மாத்திரமே பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் 10ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஒருநாள் சுபர் லீக்கில் தொடரினை நடாத்தும் இந்தியாவுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகளே ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறும் என்பதன் காரணமாக இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் வெற்றி பெற வேண்டி இருப்பதோடு, தொடரில் 3-0 என வெற்றி பெறுவதே இலங்கை கிரிக்கெட் அணி நேரடியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதனை அதிகப்படுத்தும். எனவே அழுத்தங்கள் கொண்ட நிலையிலையே இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானை எதிர்கொள்ளவிருக்கின்றது.

ஆனால் கடைசியாக விருந்தினர்களாக இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணியினை ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி வீழ்த்தி இருந்ததோடு, அதே மாதிரியான ஆட்டத்தினை ஆப்கான் தொடரிலும் இலங்கை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணியினைப் பொறுத்தவரை ஆப்கான் ஒருநாள் சுபர் லீக்கில் இதுவரை 12 போட்டிகளில் ஆடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று  புள்ளிகள் பட்டியலில் 7ஆம் இடத்தில் இருக்கின்றது. இதன் காரணமாக அவர்களுக்கு இலங்கையுடனான தொடர் அவர்களுக்கு ஒப்பிட்டளவில் அழுத்தம் குறைந்ததாக இருக்கின்றது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் சுபர் லீக்கில் அடுத்ததாக எதிர்கொள்ளும் அணிகளாக பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்றவை காணப்படுகின்றன. எனவே அவர்களும் இலங்கையுடனான போட்டிகளில்  திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றனர்.

இரு அணிகளின் கடந்தகால மோதல்கள்

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் அணிகள் வரலாற்றில் விளையாடுகின்ற முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் இதுவாகும். இதற்கு முன்னர் இரு அணிகளும் உலகக் கிண்ணம், ஆசியக் கிண்ணம் போன்ற பல் அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர்களிலேயே மோதியிருக்கின்றன. அதன்படி ஏற்கனவே இரு அணிகளும் விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் இலங்கை 3 வெற்றிகளையும், ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றது.

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பறிகொடுத்த T20I சம்பியன்!

இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் பங்குபெறும் அணிக் குழாத்தினை உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற அதே அணி ஓரிரு மாற்றங்களுடன் ஆப்கானை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த தொடரில் துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கும் வீரர்களாக பெதும் நிஸ்ஸங்க, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, குசல் மெண்டிஸ் ஆகியோர் காணப்பட தினேஷ் சந்திமாலின் சேவையும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

அதேநேரம் மத்திய வரிசையில் அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வீரர்களாக அணித்தலைவர் தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ போன்றோர் இருப்பார்கள் என நம்பப்படுகின்றது. எனினும் இந்த ஒருநாள் தொடரில் சாமிக்க கருணாரட்னவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என நம்பப்படுகின்றது. அத்துடன் இளம் சகலதுறை வீரர்களான தனன்ஞய லக்ஷான், துனித் வெலால்கே ஆகியோர் அணியில் மீண்டும் அழைக்கப்பட்டிருந்ததனை பயிற்சிகளில் அவர்கள் பங்கேற்றிருப்பதன் மூலம் கண்டறியக் கூடியததாக இருக்கின்றது.

அதேவேளை இலங்கை அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது அணியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக வனிந்து ஹஸரங்க காணப்பட லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோரின் சேவையும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்திருக்கின்றது.

ஆப்கானிஸ்தான் அணி 

மொத்தம் 18 பேர் கொண்ட அணிக் குழாத்துடன் இலங்கையினை வந்தடைந்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணியில் எதிர்பார்ப்புமிக்க துடுப்பாட்டவீரர்களாக அதன் தலைவர் ஹஸ்மத்துல்லா சஹிதி, இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், மற்றும் றஹ்மத்துல்லா சாஹ் ஆகியோர் காணப்படுகின்றனர்.

மறுமுனையில் அணியில் மீள அழைக்கப்பட்டிருக்கும் குல்படின் நயீப், மொஹமட் நபி ஆகியோர் சகலதுறைவீரர்களாக அணிக்கு பங்களிப்பு வழங்க அணியின் பந்துவீச்சுத்துறை ரஷீட் கான் மற்றும் ஹஸ்ரத்துல்லா சஷாய் ஆகியோரை நம்பியிருக்கின்றது.

அதேவேளை உலகின் பல்வேறு T20 லீக் தொடர்களில் திறமையினை ஆட்டத்தினை வெளிப்படுத்திய அறிமுக மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளர் நூர் அஹமட்டும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். எனவே சுழலுக்கு தடுமாறும் இலங்கையின் மத்திய வரிசை வீரர்களுக்கு அவரிடம் இருந்து ஒரு சவாலை எதிர்பார்க்க முடியும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<