இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான 18 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தை பொருத்தவரை நான்கு அறிமுக வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அப்ரார் அஹ்மட், மொஹமட் அலி, மொஹமட் வசீம் ஜூனியர் மற்றும் ஷஹீட் மஹ்மூட் ஆகிய வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
>> ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தமிழ் நாட்டு வீரர்
அதேநேரம், புதிய வீரர்கள் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளதுடன் கடைசியாக நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த ஹஸன் அலி, பவாட் அலாம் மற்றும் யசீர் ஷா ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், T20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் உபாதைக்குள்ளாகிய சஹீன் அப்ரிடிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் நான்கு வாரங்களுக்கு ஓய்வில் இருக்கவேண்டும் என வைத்தியர்கள் அறிவறுத்தியுள்ள நிலையில், சஹீன் அப்ரிடியும் அணியில் இணைக்கப்படவில்லை.
அணியில் இணைக்கப்பட்டுள்ள சுழல் பந்துவீச்சாளரான அப்ரார் அஹ்மட் வெறும் 13 முதற்தர போட்டிகளில் 76 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் அலி 22 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும், சுழல் பந்துவீச்சாளர் ஷஹீட் மஹ்மூட் 55 போட்டிகளில் 166 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இவர்களுடன் அணித்தலைவராக தொடர்ந்தும் பாபர் அசாம் செயற்படவுள்ளதுடன், மொஹமட் ரிஸ்வான், நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், அசார் அலி மற்றும் மொஹமட் நவாஸ் ஆகிய முன்னணி வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
>> LPL தொடரில் புதிய வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பா? கூறும் சமந்த டொடன்வெல!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 9ஆம் திகதியும் மூன்றாவது டெஸ்ட் போட்டி 17ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் குழாம்
பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், அப்துல்லா சபீக், அப்ரார் அஹ்மட், அசார் அலி, பஹீம் அஷ்ரப், ஹரிஸ் ரவூப், இமாம் உல் ஹக், மொஹமட் அலி, மொஹமட் நவாஸ், மொஹமட் வசீம் ஜூனியர், நசீம் ஷா, நௌமான் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அஹ்மட், சௌத் சகீல், ஷான் மசூட், ஷஹீட் மஹ்மூட்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<