கண்டி ஹொக்கி சிக்ஸஸ் போட்டிகளில் விமானப்படை ஆதிக்கம்

74
 

தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் நடைபெற்ற கண்டி ஹொக்கி சிக்ஸஸ் போட்டிகள், நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை மத்திய மாகாண பிரதி கல்வி அதிகாரி கௌரவ அத்துல ஜயவர்தன அவர்களின் பங்குபற்றுதலுடன் முடிவுக்கு வந்தது. 

75 அணிகள் கலந்து கொண்ட இந்த மாபெரும் போட்டித் தொடர், தொடர்ந்து இரண்டு நாட்கள் (24, 25) கண்டி பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. 75 அணிகள் பங்குகொண்டமையால் போட்டி நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது.

75 அணிகள் பங்குகொள்ளும் கண்டி ஹொக்கி சிக்ஸஸ்

இரண்டாவது முறையாகவும் நடைபெறவுள்ள கண்டி ஹொக்கி சிக்ஸஸ்…

இம்முறை போட்டியை சிறப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து பாஷா கான் ஹொக்கி அகடமி அணி பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்வணி குழு மட்டத்திலேயே வெளியேற்றப்பட்டது நம் நாட்டு வீரர்களின் திறமையை வெளிக்காட்டியது.

போட்டியின் சிறந்த பிரிவாக கருதப்பட்ட ஆண்கள் பிரிவு A போட்டியில்  பாதுகாப்புப்படை அணிகளுடன் CH & FC அணியும் கடுமையான போட்டியை வெளிக்காட்டியது. கடற்படை அணி காலிறுதிப் போட்டிக்களிலேயே வெளியேற்றப்பட, விமானப்படையின் இரண்டு அணிகளும், இராணுவம் மற்றும் CH & FC அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. CH & FC அணியை 2-3 என்ற கோல்கள் அடிப்படையில் வென்ற இராணுவ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விமானப்படை A மற்றும் B அணிகள் மோதிக்கொண்டதில், விமானப்படை A அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தீர்மானம் மிக்க இறுதி போட்டியில் இராணுவம் மற்றும் விமானப்படை A அணிகள் கடுமையான போட்டியை வெளிப்படுத்தின. முதல் 14 நிமிடங்களுக்கு பின்னர் கோல்கள் சமநிலையில் முடிய, இரண்டு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 6 நீண்ட பெனால்டிகளின் பின்னர் விமானப்படை அணி 4-3 என்ற ரீதியில் இராணுவ அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையும் சம்பியன் பட்டம் வென்றது.

பெண்களுக்கான பிரிவில் முப்படையும் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றன, அத்துடன் சீதாதேவி கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கமும் நிகராக போட்டி போட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. எனினும் சீதாதேவி கல்லூரி கடற்படை அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 4 கோல்களினால் தோல்வியடைந்தது. விமானப்படை அணி 1-0 என்ற கோல்கள் கணக்கில் இராணுவ அணியுடனான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டியில் விமானப்படை அணி 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் கடற்படை அணியை வென்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இதன் மூலம் விமானப்படை அணி ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான பிரிவு B இல் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தூதியன் பழைய மாணவர்கள் கழகம்  3-1 என்ற கோல்கள் கணக்கில் மேரியன்ஸ் கழகத்தை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில், சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் வெகனர்ஸ் கழகத்திடம் 2-3 என்ற கோல்கள் கணக்கில் பெனால்டி முறையில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பறிகொடுத்தது.

இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவியைக் கைப்பற்றிய முதல் தமிழராக சுரேஷ் சுப்ரமணியம்

தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் தேசிய டென்னிஸ் வீரரும்…

இறுதிப் போட்டியில் தூதியன் பழைய மாணவர்கள் கழகம் மற்றும் வேகனர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 14 நிமிடங்கள் முடிவில் கோல்கள் எதனையும் பெறாததனால், பெனால்டி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. பெனால்டியை 1-2 என வெற்றியீட்டிய தூதியன் பழைய மாணவர்கள் கழகம் கிண்ணத்தை கைப்பற்றியது.

பாடசாலை பிரிவில் கலந்துகொண்ட 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பிரிவில், வித்தியார்த்த கல்லூரி மற்றும் தர்மராஜ கல்லூரி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விறுவிறுப்பான போட்டியின் பின்னர் வித்தியார்த்த கல்லூரி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியது.

16 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் சீதாதேவி கல்லூரி மகமாயா கல்லூரியை 3-0 என இலகுவாக வென்று சம்பியன் ஆனது.

இப்போட்டியில் தத்தமது பிரிவில் திறமையை வெளிக்காட்டிய அனைத்து வீரர்களையும் கௌரவிக்கும் வகையில், சிறந்த வீரர் மற்றும் சிறந்த கோல் காப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த வீரர்கள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு,

பிரிவு A – ஆண்கள்

சிறந்த வீரர் – சமீர பெரேரா (விமானப்படை)

சிறந்த கோல் காப்பாளர் – துஸித் ரத்னசிறி (விமானப்படை)

பிரிவு B – ஆண்கள்

சிறந்த வீரர் – சசிந்து தனஞ்சய (தூதியன் பழைய மாணவர்கள் கழகம்)

சிறந்த கோல் காப்பாளர் – தரிந்து டில்ஷான் (தூதியன் பழைய மாணவர்கள் கழகம்)

பெண்கள் பிரிவு

சிறந்த வீராங்கனை – சாமென் ஜான்ஸ் (விமானப்படை)

சிறந்த கோல் காப்பாளர் – எம்.சி. சிறிவர்தன (விமானப்படை)

16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு

சிறந்த வீரர் – கே.கே.திஸாநாயக்க (வித்தியார்த்த கல்லூரி)

சிறந்த கோல் காப்பாளர் – வி.கே.வலல்லாவிட (வித்தியார்த்த கல்லூரி)

16 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவு

சிறந்த வீராங்கனை – அமாஷா பண்டார (சீதாதேவி கல்லூரி )

சிறந்த கோல் காப்பாளர் – தேஷிகா குணாதிலக (சீதாதேவி கல்லூரி )