ஜிம்பாப்வேயில் இடம்பெறும் முத்தரப்பு தொடருக்கு இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க

2565
Upul Tharanga

சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, சிம்பாப்வேயில் நடைபெற இருக்கும் சிம்பாவே மற்றும் மேற்கிந்திய தீவுகள் உடனான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடருக்கு, இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வழமையாக இலங்கை அணியை வழி நடாத்தும் சகலதுறை ஆட்டக்காரர் எஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் துணைத் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் காயம் காரணமாக இம்முறை அணியில் இடம் பெறாத காரணத்தினாலேயே, 31 வயதான இடது கை துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க இலங்கை அணியை வழி நடாத்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச மட்டத்தில், தேசிய அணியை முதல் தடவையாக வழி நடத்தும்  உபுல் தரங்கவிற்கு, அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2005இல் மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய உபுல் தரங்க திலகரத்ன டில்ஷானின் ஓய்வுக்குப் பின்னர், தற்போதைய தேசிய அணியில் 188 போட்டிகளில் பங்குபற்றி 13 சதங்கள், 29 அரைச்சதங்கள் உட்பட மொத்தமாக 5526 ஓட்டங்களைக் குவித்து முன்னணியில் இருக்கும் ஒரே வீரர் ஆவார்.

அதே சமயத்தில், அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர, சகலதுறை ஆட்டக்காரர் செஹான் ஜயசூரிய மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வந்தர்சேய் ஆகியோரும் அணியில் உள்ளவாங்கப்பட்டுள்ளனர்.

நுவன் குலசேகர இறுதியாக இவ்வருட ஆரம்பத்தில் நியூசிலாந்து அணி உடனான 5 ஒருநாள் போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்தார். அத்தொடரை 3-1 கணக்கில் இலங்கை அணி இழந்திருந்தது. வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வந்தர்சேய் பயிற்சிகளின்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றியிருக்கவில்லை.

சகலதுறை ஆட்டக்காரர் செஹான் ஜயசூரிய மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 161 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இறுதியாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

சமீபத்தில் முடிவடைந்த சிம்பாவே உடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன இந்த ஒருநாள் குழாமிற்கு முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த அவுஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி குழாமில் இடம் பெற்றிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக வலது கை சுழல் பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேரா, சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா மற்றும் இடது கை சுழல் பந்து வீச்சாளார் அமில அபோன்சு ஆகியோர் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கு தெரிவு செய்யப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப், சுரங்க லக்மால் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் லஹிறு குமார ஆகியோரும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் குழாம் –

உபுல் தரங்க (அணித்தலைவர் ), குசல் ஜனித் பெரேரா (துணைத் தலைவர்), தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், செஹான் ஜயசூரிய, நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்ன, தசுன் சானக, நுவன் குலசேகர, நுவன் பிரதீப், லஹிரு குமார, சுரங்க லக்மால் , சச்சித் பத்திரண, லக்ஷான் சந்தகன், ஜெப்ரி வந்தர்சேய்.