தென் கொரியாவில் தரங்க தங்கம் வெல்ல; நதீஷாவிற்கு வெள்ளிப் பதக்கம்

Asian Throwing Championships 2025

54
tharanga & nadeeka

தென்கொரியாவில் நடைபெற்ற 2025 ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க பதிரகே தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, நதீஷா தில்ஹானி லேக்கம்கே வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பிற்கு முன்னோடியாக தென் கொரியாவின் மெக்போவில் நடைபெற்ற ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையிலிருந்து ருமேஷ் தரங்க பதிரகே மற்றும் நதீஷா தில்ஹானி லேக்கம்கே ஆகிய இருவரும் பங்குபற்றினர். இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட ருமேஷ் தரங்க, 82.05 மீற்றர் தூரம் எறிந்து முதலிடம் பெற்றார்.

21 வயதான ருமேஷ் தரங்க இறுதியாக, கடந்த 12ஆம் திகதி இந்தியாவின் புவணேஸ்வர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்திய பகிரங்க உலக மெய்வல்லுனர் வெண்கல சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 85.78 மீற்றர் தூரம் எறிந்து இலங்கை சாதனையை முறியடித்து, தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ஜப்பானின் நாகனுமா 78.60 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், பாகிஸ்தானின் யாஸிர் 77.43 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதீஷா லேக்கம்கே, 57.53 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த தூரம் அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையையும் இடம்பெற்றது.

இப்போட்டியில் ஜப்பானின் உஇதா (62.20 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், சீனாவின் காய் (57.47 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, அடுத்த மாதம் 13 முதல் 21ஆம் திகதி வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு ஈட்டி எறிதல் வீரர்களான சுமேத ரணசிங்க மற்றும் ருமேஷ் தரங்க ஆகிய இருவரும் ஏற்கனவே நேரடி தகுதியைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், நதீஷா லேக்கம்கே உலக மெய்வல்லுனர் தரவரிசை புள்ளிகள் அடிப்படையில் அதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<