கொவிட்-19 காரணமாக ஜிம்பாப்வே தொடரிலிருந்து ஜனித் லியனகே நீக்கம்

Zimbabwe tour of Sri Lanka 2022

278
Janith Liyanage

இலங்கை அணியின் புதுமுக துடுப்பாட்ட வீரர் ஜனித் லியனகே கொவிட்-19 தொற்று காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக்கில் தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருந்த ஜனித் லியனகே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

>> விளையாட்டுத்துறை அமைச்சர் பானுக்கவிடம் விடுத்துள்ள கோரிக்கை

இந்தநிலையில் ஜனித் லியனகே கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருப்பதால், அவரால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாது என்பதனை இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொவிட்-19 தொற்று காரணமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது வீரராக ஜனித் லியனகேவும் நீக்கப்பட்டுள்ளார்.

எனவே, இவர்களுக்கு பதிலாக தடையிலிருந்து மீண்டுள்ள குசல் மெண்டிஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் ஆகியோர் ஜிம்பாப்வே தொடருக்கான குழாத்தில் இணைக்கப்படலாம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகின்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் 18 மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், குறித்த மூன்று போட்டிகளும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<