கெயிலைத் தொடர்ந்து ஜமைக்கா அணியை வெறுக்கும் அன்ட்ரூ ரஸல்ஸ்

74
ANDRE RUSSELL

இவ்வருடம் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் (சி.பி.எல்) டி20 தொடருக்குப் பிறகு ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து விலகவுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான அன்ட்ரூ ரஸல் அறிவித்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில், நடப்பு சீசனில் ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து விடுக்கப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகிய நிலையில் அன்ட்ரூ ரஸ்ஸல், இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்

கொரோனாவை விட பயங்கரமானவர் சர்வான் – கெயில் ஆவேசம்

ஜமைக்கா தலவாஸ் அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு மேற்கிந்திய தீவுகள்…

இதன்படி, இவ்வரும் நடைபெறவுள்ள சி.பி.எல் தொடர் தனக்கு ஜமைக்கா தலாவாஸ் அணியுடனான இறுதி தொடராக அமையும் என வீடியோ ஒன்றின் மூலம் ரஸல் தெரிவித்துள்ளார். 

அந்த அணியுடனான ஒப்பந்தம் அடுத்த வருடம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், கடந்த காலங்களில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாகவே ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அன்ட்ரூ ரஸல், நான் எப்போதும் அணியின் வெற்றிக்காக விளையாடுகின்ற வீரர். உலகம் முழுவதும் நடைபெறுகின்ற டி20 போட்டிகளில் 13 சம்பியன் பட்டங்களை வென்று கொடுக்க எனது பங்களிப்பினை வழங்கியுள்ளேன்.  

எனக்கு தேவையானவற்றை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை

எனவே, ஜமைக்கா தலாவாஸ் அணியுடன் இனிமேலும் விளையாடுவதற்கான மனநிலை எனக்கு கிடையாது. நான் இதுவரை விளையாடிய அணிகளில் ஒரு வித்தியாசமான கொள்கையுடைய அணி இதுதான்.  

குறிப்பாக, இந்த அணியில் என்னை நெருங்குகின்றவர்களும் வித்தியாசமானவர்கள். நான் சாதாரண வீரர் அல்ல. இந்த அணியின் தலைவரும் நான் தான். எனவே அவர்களது செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் என்னை நிறைய யோசிக்க வைத்தது” என்றார்.  

தான் ஜமைக்கா தலாவாஸ் அணியினால் நடத்தப்பட்ட முறை குறித்து அன்ட்ரூ ரஸல் தனது அதிருபதியை வெளியிட்டிருந்தார்.  

”குறிப்பாக, எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடாத முதல்தர அணியொன்றுக்காக விளையாடுகின்ற ஒரு வீரராகவே என்னைப் பார்த்தார்கள். எனது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அவ்வாறு தான் கடந்த 2 வருடங்களாக என்னை நடத்தினார்கள்

மூன்று மாதங்கள் சம்பளம் இல்லாமல் விளையாடிய மே. தீவுகள் வீரர்கள்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து..

இதேவேளை, இவ்வருடத்துக்கான போட்டித் தொடரில் அணியில் எந்ததெந்த வீரரை தக்கவைத்துக் கொள்வது? யாரை ஒப்பந்தம் செய்வது குறித்து ஒரு தலைவராக நான் அணியின் நிர்வாகி மிலரிடம் கேட்டேன். அதற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை

எனவே, எனது ஒப்பந்தம் நிறைவடைய இன்னும் ஒரு வருடம் உள்ளதால், தற்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளேன்” என தெரிவித்தார்

இதனிடையே, கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தலாவாஸ் அணி வழங்கிய ஒப்பந்தத் தொகையைக் காட்டிலும் அதிகமான தொகை கொடுத்து அன்ட்ரூ ரஸலை ஒப்பந்தம் செய்ய ஏனைய அணிகள் முந்தியடிப்பதாகத் தெரிவித்த அன்ட்ரூ ரஸல், அந்த அணியில் தொடர்பாடல் என்பது மிகவும் மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்

”இந்த அணியில் இருக்கின்ற மிகப் பெரிய குறைபாடு தான் தொடர்பாடல். இதுவரை எனக்கு எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. அந்த அணியில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் எனக்குத் தெரியாது

கிறிஸ் கெயிலை நீக்கியுள்ளார்கள். ஏன் அவர்கள் கிறிஸ் கெயிலை நீக்கினார்கள்? அவருக்கு ஜமைக்கா தலாவாஸ் அணியுடன் இன்னும் 3 வருடங்கள் ஒப்பந்தம் இருக்கின்றது

ஒரு அணியாக நீங்கள் ஒருபோதும் ஒப்பந்த விதிமுறைகள் மீறக்கூடாது. அது உங்களுக்குத் தான் நெருக்கடியைக் கொடுக்கும்” என தெரிவித்தார்.  

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நடைபெறுமா?

இலங்கைக்கு ஜூலை மாதத்தின் கடைசிப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்..

இதேவேளை. ஜமைக்கா அணியின் தலைவராக தொடர்ந்து செயற்படுவது குறித்து பேசிய அன்ட்ரூ ரஸல், அணியில் உள்ள அனைவரிடமும் எனது தொலைபேசி இலக்கம் உண்டு. ஆனால் எவருமே செய்தி அனுப்பமாட்டார்கள். இங்கு என்னை அணியின் தலைவராக கருதாவிட்டால், எனக்கு அந்த தலைவர் பதவியும் தேவையில்லை. நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  

எனவே, நான் ஜமைக்கா தலாவாஸ் அணிக்காக விளையாடுகின்ற கடைசிப் போட்டித் தொடர் இதுதான். அந்த அணிக்காக இந்த வருடமும் சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க ஆவலுடன் உள்ளேன். ஆனால் அந்த அணிக்காக விளையாடுகின்ற கடைசி பருவம் இதுதான்” என குறிப்பிட்டார்.  

கடந்த 2018ஆம் ஆண்டில் ஊக்கமருந்து தடையில் இருந்து மீண்டுவந்த பின்னர், 32 வயதான அன்ட்ரூ ரஸல், ஜமைக்கா தலாவாஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தலாவாஸ் அணி புள்ளிகள் பட்டியல் கடைசி இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

ஆனாலும், கடந்த வருடம் 5 போட்டிகளில் விளையாடிய அவர், 6 விக்கெட்டுக்களையும், 99 ஓட்டங்களையும் குவித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.  

எனினும், அதன்பிறகு ஏற்பட்ட உபாதையால் தொடர்ந்து அவரால் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாமல் போனது

இதேவேளை, ஜமைக்கா தலாவாஸ் அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதற்கு அந்த அணியின் உதவிப் பயிற்சியாளரும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தான் காரணம் என நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில், கடந்த சில தினங்களுக்கு குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், கிறிஸ் கெயிலினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை முற்றாக மறுத்த ஜமைக்கா தலாவாஸ் அணி நிர்வாகம், கடந்த பருவத்தில் சிறப்பாக விளையாடாத வீரர்களை நீக்குவதற்கு ராம்நரேஷ் சர்வான் காரணம் அல்ல எனவும், அணி நிர்வாகம் எடுத்த ஏகோபித்த முடிவின் படி தான் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<