பிளே ஓவ்ப் சுற்றுக்கு தகுதி பெற்ற வேலணை வேங்கைகள்; தெல்லியூர் டைடன்ஸிற்கு முதலாவது வெற்றி

313

முதலாவது ஜெப்னா சுப்பர் லீக் T20  தொடரின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் நேற்றைய தினம் (13) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. தொடர்ச்சியாக குழு B அணிகளுக்கே போட்டிகள் நிரலிடப்பட்டுள்ள நிலையில் அவர்களே தொடர்ந்தும் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.

கொக்குவில் ஸ்டார்ஸ் எதிர் வேலணை வேங்கைகள்

ஜெப்னா சுப்பர் லீக்கின் மூன்றாவது போட்டியில் முதலாவது நாளில் வெற்றிகளை பதிவுசெய்த, கொக்குவில் ஸ்டார்ஸ் மற்றும் வேலணை வேங்கைகள் பங்கெடுத்திருந்தனர்.

ஜெப்னா சுப்பர் லீக்கை வெற்றியுடன் ஆரம்பித்த கொக்குவில் ஸ்டார்ஸ், வேலணை வேங்கைகள்

இன்று (12) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி…

முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு அழைக்கப்பட்ட கொக்குவில் ஸ்டார்ஸ் 5 ஆவது ஓவரில் 45 ஓட்டங்களை பெற்றிருக்கையில் முதலிரு விக்கெட்டுக்களும் சரிக்கப்பட்டது. அணி 119 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஜனுதாஸ் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே வினோத்தும் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கொக்குவில் வீரர்கள் ஓட்ட வேகத்தினை அதிகரிக்க முயற்சிக்க வேலணை வேங்கைகள் விக்கெட்டுக்களை விரைவாக சாய்த்தனர். 19.3 ஓவரில் 147 ஓட்டங்களையே கொக்குவில் ஸ்டார்ஸ் பெற்றுக்கொண்டனர்.

வேலணை வேங்கைகள் சார்பாக சுழல் பந்துவீச்சாளர் கோகுலன் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சத்தியன் மற்றும் விதுசன் ஜோடி தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த வேலணை வேங்கைகள் சார்பாக மணிவண்ணன் முன்வரிசையில் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நான்காவது இலக்கத்தில் களம் நுழைந்து அதிரடியாக அரைச்சதம் கடந்த சத்தியன், ஓட்ட எண்ணிக்கை 147 என சமநிலையில் இருக்கையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த பந்திலேயே உதயசாந் பவுண்டரி ஒன்றைப் பெற்றுக்கொடுக்க, இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்ற வேலணை வேங்கைகள் பிளே ஓவ் (Play off) சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளனர்.

கொக்குவில் ஸ்டார்ஸ் சார்பாக சுபேந்திரன் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

  • போட்டியின் ஆட்டநாயகன் – சத்தியன் (வேலணை வேங்கைகள்)

போட்டியின் சுருக்கம்  

கொக்குவில் ஸ்டார்ஸ் – 147 (19.3) – ஜனுதாஸ் 40, வினோத் 30, ஜான்சன் 20, மதுசன் 3/20, விதுசன் 2/21

வேலணை வேங்கைகள் – 151/5 (16.3) – சத்தியன் 53, மணிவண்ணன் 28, சுபேந்திரன் 3/28

போட்டி முடிவு – 5 விக்கெட்டுக்களால் வேலணை வேங்கைகள் வெற்றி

போட்டியின் புகைப்படங்களை பார்வையிட

தெல்லியூர் டைடன்ஸ் எதிர் பண்ணை ரில்கோ கிறேடியேற்றேர்ஸ்

ஜெப்னா சுப்பர் லீக் தொடரின் நான்காவது போட்டியின், தமது முதலாவது போட்டியில் தோல்வியடைந்திருந்த தெல்லியூர் டைடன்ஸ் மற்றும் பண்ணை ரில்கோ கிறேடியேற்றேர்ஸ் அணிகள் பிளே ஓவ்ப் இற்கு தகுதி பெறுவதற்கு கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் மோதியிருந்தனர்.

தெல்லியூர் வீரர்கள் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தனர். முன்வரிசையில் ஒனாசியஸ் (15), அனஸ்ராஜ் (29), கௌதமன் (21) ஆகியோர் பண்ணை தரப்பிற்கு ஓரளவு நம்பிக்கை கொடுக்க 3 விக்கெட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை சேகரித்தனர்.

மத்திய வரிசையில் தர்சிகன் மட்டும் நிதானமாக துடுப்பாட, மறுபக்கத்தில் தெல்லியூர் வீரர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

134 ஓட்டங்கள் என்ற பண்ணை வீரர்கள் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தெல்லியூர் டைடன்ஸ், அஜித்தின் 27 ஓட்டங்களுடன் துணையுடன் 5 ஓவர்களின் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 41 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

ஆறாவது ஓவர் முதல் 13 ஆவது ஓவர் வரையிலான 8 ஓவர்களை தமக்கிடையே பகிர்ந்த அனஸ்ராஜ் மற்றும் மதன் ஜோடி வெறுமனே 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

72 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்த தெல்லியூர் தரப்பிற்கு,  பின்வரிசையில் சரண் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

கபிலன், கஜீபராஜ் ஜோடி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கையில், தெல்லியூர் வீரர்கள் வெற்றி பெறுவதற்கு இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

சரத் வீசிய இறுதி ஓவரில் கபிலன் முதலாவது பந்தில் 1 ஓட்டத்தினை சேகரித்தார் மேலும் உதிரியாக ஒரு ஓட்டம் கிடைக்கப்பெற்றது.

அடுத்த 4 பந்துகளில் கஜீபராஜ் 14 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க தெல்லியூர் டைடன்ஸ் ஒரு பந்து மீதமிருக்கையில் முதலாவது வெற்றியினை பதிவு செய்தது.  

அதேவேளை, இரு போட்டிகளிலும் தோல்வியடைந்த பண்ணை ரில்கோ கிறேடியேற்றேர்ஸ் பிளே ஓவ்ப் வாய்ப்பினை இழந்துள்ளனர். கொக்குவில் ஸ்டார்ஸ், தெல்லியூர் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி மற்றும் வேலணை வேங்கைகள் குழு B இலிருந்து பிளே ஓவ்ப் சுற்றிற்கு தகுதிபெறும்.

  • போட்டியின் ஆட்டநாயகன் – கபிலன் (தெல்லியூர் டைடன்ஸ்)

போட்டியின் சுருக்கம்

பண்ணை ரில்கோ கிறேடியேற்றேர்ஸ் – 133/9 (20) – அனஸ்ராஜ் 29, தர்சிகன் 29, கௌதமன் 21, சுஜாந்தன் 3/32, கபிலன் 2/25

தெல்லியூர் டைடன்ஸ் – 134/8 (20) – அஜித் 27, கஜீபராஜ் 22, கபிலன் 20, அனஸ்ராஜ் 3/15, மதன் 3/16

போட்டி முடிவு – தெல்லியூர் டைடன்ஸ் 2 விக்கெட்டுக்களால் வெற்றி

போட்டியின் புகைப்படங்களை பார்வையிட

அடுத்தவாரம் குழு B அணிகளுக்கு இடையிலான இறுதி குழுநிலை போட்டிகள் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்திலும், குழு A அணிகளுக்கு இடையிலான போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<