தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெற்று வரும் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான 2018ஆம் ஆண்டின் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான (AFC Cup) தகுதிகாண் போட்டித் தொடரில் தஜிகிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை இளம் அணி 6-0 என்கிற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இத்தொடரில், தாம் இறுதியாகப் பங்கேற்றிருந்த போட்டியில் உஸ்பகிஸ்தான் அணியுடன் 10-0 என்ற கோல்கள் கணக்கில் படுதோல்வியடைந்திருந்த இலங்கை வீரர்கள் தொடரில் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இந்த ஆட்டத்தில் களமிறங்கியிருந்தனர்.
இலங்கைக்கு எதிராக கோல் மழை பொழிந்த உஸ்பகிஸ்தான்
தஜிகிஸ்தானில் இடம்பெறும் 19 வயதின்…
மறுமுனையில் தஜிகிஸ்தான் அணி பங்களாதேஷூக்கு எதிரான தமது முதல் ஆட்டத்தினை கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் முடித்த நிலையில் இலங்கையின் இளம் வீரர்களை எதிர்கொண்டிருந்தது.
துஷான்பே நகரின் குடியரசு மத்திய நிலைய கால்பந்து அரங்கில் இன்று (4) இடம்பெற்ற இந்தப் போட்டியில் சொந்த மைதான அனுபவங்களினை கொண்டிருந்த தஜிகிஸ்தான் அணியே ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
முன்கள வீரரான அப்துல்லோவ் அதம்ஜோன் போட்டியின் 31ஆவது நிமிடத்தில் முதல் கோலினைப் போட்டு தஜிகிஸ்தான் அணியினை வலுப்படுத்தினார்.
முதல் கோல் போடப்பட்டு இரண்டு நிமிடங்களின் பின்னர் அடுத்த கோலினையும் அதம்ஜோன் பெனால்டி முறையில் பெற போட்டியின் முதற்பாதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தஜிகிஸ்தான் முன்னிலை அடைந்து கொண்டது.
முதல் பாதி : தஜிகிஸ்தான் 2 – 0 இலங்கை
இரண்டாம் பாதியில் இலங்கை அணியின் பின்களம் முன்னரைவிட பலப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் போட்டியின் 75ஆவது நிமிடத்திலேயே ஆட்டத்தின் மூன்றாம் கோலினை பலம் கொண்ட தஜிகிஸ்தான் அணியினால் பெற முடிந்தது.
மூன்றாம் கோலினை அவ்வணியின் மத்தியகள வீரரான சரிபோவ் உமர்ஜோன் பெற்றுக் கொடுத்தார். இந்த கோல் பெறப்பட்டு நான்கு நிமிடங்களின் பின்னர் யொட்கோரோவ் டாலர் இன்னுமொரு கோலினைப் பெற 4-0 என்ற முன்னிலையோடு தஜிகிஸ்தான் போட்டியின் வெற்றியாளராக மாறுவதற்கு தயராகியிருந்தது.
ஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா?
இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கு…
இவ்வாறான ஒரு நிலையில், ஆட்டத்தின் இறுதி 10 நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை தஜிகிஸ்தான் வீரர்கள் பெற்றுக்கொண்டனர்.
சமியேவ் சரோம் 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலினையும், அப்துல்லோவ் அதம்ஜோன் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் தனது ஹட்ரிக் கோலினையும் மேலதிகமாகப் பெற்றுத்தர, அவ்வணி இலங்கை வீரர்களை இலகுவாக வீழ்த்தியிருந்தது.
முழு நேரம்: தஜிகிஸ்தான் 6 – 0 இலங்கை
கோல் பெற்றவர்கள்
தஜிகிஸ்தான் – அப்துல்லோவ் அதம்ஜோன் 31’, 33P’ & 86’, யொட்கோரோவ் டாலர் 79’, சமியேவ் சரோம் 83’, சரிபோவ் உமர்ஜோன் 75’
இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இலங்கை அணி 2 கோல்களை மட்டுமே பெற்றுள்ளது. எனினும் இலங்கை அணிக்கு எதிராக 18 கோல்கள் பெறப்பட்டுள்ளன.