ஜப்னா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பாப் டு பிளெசிஸ்

Lanka Premier League – 2021

277
Faf du Plessis grabs Jaffna Kings

இந்த ஆண்டு நடைபெறவுள்ள இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் (LPL 2021) தொடரில் களமிறங்கவுள்ள ஜப்னா கிங்ஸ் அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக (Icon Player) தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பாப் டு பிளெசிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

LPL தொடரின் இரண்டாவது அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை LPL தொடருக்கான வீரர்கள் பதிவு கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி முதல் ஆரம்பமானதுடன், ஒக்டோபர் 7ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.

இதன்படி, இம்முறை LPL தொடரில் விளையாடுவதற்கு 699 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

>> LPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை தெரிவுசெய்துள்ள 225 வீரர்கள் இம்முறை LPL வீரர்கள் ஏலத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் 74 சர்வதேச வீரர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இம்முறை LPL தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை வீரர்கள் ஏலம் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு அணிகளுக்கும் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தெரிவுசெய்து கொள்ள போட்டி ஏற்பாட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த ஆண்டு LPL தொடரில் புதிய உரிமையாளர் மற்றும் புதிய பெயருடன் களமிறங்கவுள்ள ஜப்னா கிங்ஸ் அணி, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் பாப் டு பிளெசிஸை, தமது அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் சபையும், போட்டிகளை நடத்தும் IPG நிறுவனமும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்ற 37 வயதான பாப் டு பிளெசிஸ், நேற்று இரவு நடைபெற்ற IPL தொடரின் இறுதிப் போட்டியில் 86 ஓட்டங்களைப் பெற்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச்சென்றார்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த LPL பருவத்தில் விளையாடிய உள்ளூர் வீரர்கள் நால்வரை இம்முறை பருவத்தில் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<