தமிழ் நாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த 2019 ஐ.பி.எல் ஏலம்

744

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளுக்கு தமிழ் நாட்டிலிருந்து இம்முறை ஏலத்தில் இரண்டு வீரர்கள் மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்ற அதேவேளை மொத்தமாக 9 தமிழக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

லீக் போட்டித் தொடர்களை பொருத்த வரையில் இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரத்துடன் வருடா வருடம் நடைபெற்றுவரும் இந்த போட்டிகளுக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது.

மீண்டும் மும்பை அணியில் விளையாடவுள்ள லசித் மாலிங்க

இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் காலப்பகுதிகளில்  ஐ.சி.சி இன் சர்வதேச தொடர்கள் நடைபெறுவதும் மிக அரிதாகவே காணப்படுகின்றது. பணம் கோடி கோடிகளாக கொட்டப்படுகின்ற ஒரு விளையாட்டாகவும் இந்த ஐ.பி.எல் போட்டித் தொடர் அமைந்துள்ளது.

2008ஆம் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் கடந்த ஆண்டு வரை 11 தடவைகள் நடைபெற்றுள்ளது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 3 தடவைகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 தடவைகளும், ராஜஸ்தான் ரோயல்ஸ், டெகான் சார்ஜஸ் மற்றும் சன் ரைஸஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் 1 தடவையும் சம்பியன் மகுடத்தை சூடியுள்ளது.

இவ்வாறு வருடாந்தம் நடைபெறுகின்ற இந்த தொடருக்கு ஏலத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொரு அணிகளுக்கும் வீரர்கள் தெரிவு செய்யப்படுவர். இந்த அடிப்படையில் அடுத்த வருடம் (2019) நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை (18) ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றிருந்தது.

70 வீரர்களை தெரிவு செய்வதற்கான இந்த ஏலத்தில் மொத்தமாக 351 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் 228 இந்தியாவை சேர்ந்த வீரர்களும், 123 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்கியிருந்தனர். அதில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாட்டு வீரர்களும் இறுதியாக ஏலத்தில் 8 அணிகளாலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதில் அதிகூடிய தொகையில் இந்த முறையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தவ் உனட்கட் இந்திய ரூபாய் 8.4 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த வருடமும் இதே அணியால் இந்திய ரூபாய் 11.5 கோடிக்கு ஏலத்தில் இவர் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்ததாக 7 விதமான முறையில் பந்துகளை வீசக்கூடிய தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி எட்டாத விலைக்கு ஏலம் போயுள்ளார். இந்திய ரூபாய் 20 இலட்சத்தை அடிப்படை விலையாக கொண்ட இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்திய ரூபாய் 8.4 கோடிக்கு ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளது.

காது கேட்காமலும், வாய் பேசாமலும் உலக கிரிக்கெட் சம்பியனான நம்மவர்கள்

27 வயதான வருண் சக்கரவர்த்தி தமிழ் நாடு பிரிமியர் லீக் மூலமாக இந்தியன் பிரிமியர் லீக்குக்குள் தடம் பதித்துள்ளார். இந்த வருடம் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக விளையாடிய இவரின் திறமையை கண்டு ஐ.பி.எல் அணிகள் போட்டி போட்டு இவரை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்து கொண்டிருந்த வருணுக்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. வேலைக்கு செல்வதை விட முழு நேரமாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டால் சாதிக்கலாமே என்கின்ற எண்ணம்.

தன்னுடைய 25ஆவது வயதில் கிரிக்கெட் தான் தன்னுடைய எதிர்காலம் என முடிவெடுத்து தனது வேலையை கைவிட்டுவிட்டு உள்ளுர் அணிகளுக்காக விளையாட ஆரம்பித்தார். பலரிடமிருந்தும் எதிர்ப்புக்களும், கேள்விகளும் வருண் மீது எழத்தொடங்கின. ஆனால் அவர் இவை ஒன்றையும் பொருட்படுத்தாது கிரிக்கெட்டிலேயே தனது அவதானத்தை செலுத்தினார்.

வேகப்பந்து வீச்சாளராக வலைப்பயிற்சிகளில் விளையாடிவந்த வருணுக்கு திடீரென காலில் உபாதையொன்று ஏற்பட்டது. தொடர்ந்தும் வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்தினால் மேலும் பெரியளவிலான ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுழற்பந்துக்கு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்.

டி.என்.பி.எல் மூலமாக விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியில் விளையாடுவதற்கான இடம் கிடைத்தது. அதேவேளை விஜய் ஹசாரே தொடர் மூலமாக ரஞ்சி தொடரிலும் தமிழக அணிக்காக விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது.

இவ்வாறு இருந்த வருண் சக்கரவர்த்தியை சென்னை, மும்பை, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா போன்ற அணிகள் இம்முறை ஏலத்தில் போட்டி போட்டு அடிப்படை விலையிலிருந்து 42 மடங்கு விலைக்கு பஞ்சாப் அணி கொள்வனவு செய்துள்ளது.

இது எவ்வாறு இருந்தாலும் 2019 ஐ.பி.எல் தமிழக வீரர்களுக்கு ஏமாற்றத்தையை கொடுத்துள்ளது. மொத்தமாக 9 வீரர்கள் ஏலத்துக்கான பட்டியலில் இடம்பிடித்திருந்தாலும் கூட 8 அணிகளாலும் வெறுமென இரண்டு வீரர்கள் மாத்திரம் ஏலத்தில் புதிகாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரையும் பஞ்சாப் அணியே கொள்வனவு செய்துள்ளது. ஒருவர் கோடிகளில் புரண்ட வருண் சக்கரவர்த்தி. மற்றயவர் எம். முருகன் அஷ்வின். இவர் அடிப்படை விலையான இந்திய ரூபாய் 20 இலட்சத்திற்கு விலை போனார். எஞ்சிய 7 பேரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதில் 2018 ஐ.பி.எல் ஏல பட்டியலில் இடம் பெற்று எந்த அணிகளாலும் கொள்வனவு செய்யப்படாத பாபா இந்திரஜித் மற்றும் அவரது சகேதரர் பாபா அபரஜித் ஆகிய இரு வீரர்களும், இந்த முறையும் 2019 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திலான் சமரவீரவின் ஓய்வும், குசலின் இரட்டைச் சதமும்

ஏற்கனவே 7 தமிழக வீரர்கள் தக்க வைக்கப்பட்ட வீரர்களாக காணப்படுகின்ற நிலையில், இவர்கள் இருவருடன் சேர்த்து மொத்தமாக 9 தமிழக வீரர்கள் 2019 ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை கொண்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு.

  1. வருண் சக்கரவர்த்தி – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்திய ரூபாய் 8.4 கோடி)
  2. ரவிச்சந்திரன் அஷ்வின் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்திய ரூபாய் 7.6 கோடி)
  3. தினேஷ் கார்த்திக் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்திய ரூபாய் 7.4 கோடி)
  4. வொஷிங்டன் சுந்தர் – ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் (இந்திய ரூபாய் 3.2 கோடி)
  5. விஜய் சங்கர் – சன் ரைஸஸ் ஹைதராபாத் (இந்திய ரூபாய் 3.2 கோடி)
  6. முரளி விஜய் – சென்னை சுப்பர் கிங்ஸ் (இந்திய ரூபாய் 2 கோடி)
  7. நடராஜன் – சன் ரைஸஸ் ஹைதராபாத் (இந்திய ரூபாய் 40 இலட்சம்)
  8. ஜெகதீசன் – சென்னை சுப்பர் கிங்ஸ் (இந்திய ரூபாய் 20 இலட்சம்)
  9. எம். முருகன் அஷ்வின் – கிங்ஸ் லெலவன் பஞ்சாப் (இந்திய ரூபாய் 20 இலட்சம்)

எனவே இந்த 9 தமிழக வீரர்களும் எவ்வாறு தங்களது திறமைகளை வெளிக்காட்டி இந்திய அணியில் இடம்பிடிக்க போகின்றார்கள் என்பதை ஐ.பி.எல் போட்டிகளினூடாக பொருத்திருந்து பார்க்கலாம்.

2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் மார்ச், ஏப்ரல் மாதமளவில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<