பூரான், ஸ்டொய்னிஸ் அதிரடியில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வெற்றி

122
Lucknow Super Giants

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 15ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினை லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் ஒரு விக்கெட்டினால் வீழ்த்தி அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>> சஞ்சு சம்சன் – சங்கக்கார இடையே வேடிக்கையான உரையாடல்

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி திங்கட்கிழமை (10) பெங்களூர் நகரில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் தலைவர் கே.எல்.ராகுல் முதலில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினை துடுப்பாட பணித்திருத்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரர்களாக வந்திருந்த அணித்தலைவர் டு பிளேசிஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அரைச்சதம் விளாசினர். இதில் டு பிளேசிஸ் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் கோலி 44 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 61 ஓட்டங்கள் பெற்றார். இவர்களோடு கிளன் மெக்ஸ்வெலும் அரைச்சதம் பெற்று 29 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் 59 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் மார்க் வூட் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் நிறைந்த 213 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் காட்டிய போதும், பின்னர் நிகோலஸ் பூரான் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரின் அதிரடி கைகொடுக்க, அவ்வணி வெற்றி இலக்கினை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களுடன் அடைந்தது.

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிகோலஸ் பூரான் வெறும் 19 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் பூரான் இப்போட்டியில் 15 பந்துகளுக்கு அதிரடி அரைச்சதம் விளாசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 30 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் உடன் 65 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

>> ஐ.பி.எல். நடப்புச் சம்பியனுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த ரிங்கு சிங்

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சில் வேய்ன் பர்னல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் நிகோலஸ் பூரான் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 212/2 (20) டு பிளேசிஸ் 79(46), விராட் கோலி 61(44), கிளன் மெக்ஸ்வெல் 59(29) மார்க் வூட் 32/1(4)

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் – 213/9 (20) மார்கஸ் ஸ்டொய்னிஸ் 65(30), நிகோலஸ் பூரான் 62(19), மொஹமட் சிராஜ் 22/3(3), வேய்ன் பர்னல் 41/3(3)

முடிவு – லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் ஒரு விக்கெட்டினால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<