நோர்விச் சிட்டியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த மென்செஸ்டர் சிட்டி

97
Image Courtsey - Reuters

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை (14) நடைபெற்றன.

மன்செஸ்டர் சிட்டி எதிர் நோர்விச் சிட்டி

ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி இந்த பருவத்தில் தனது முதல் தோல்வியாக நோர்விச் சிட்டியிடம் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்ந்தது.

போட்டியின் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த நோர்விச் சிட்டி முதல் பாதியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்போது 18 ஆவது நிமிடத்தில் கென்னி மெக்லீன் அந்த அணிக்காக முதல் கோலை பெற பத்து நிமிடங்களின்பின் டொட் கான்ட்வெல் மற்றொரு கோலை பெற்றார். இந்நிலையில் செர்ஜியோ அகுவோரோ மன்செஸ்டர் சிட்டி அணிக்காக பதில் கோல் ஒன்றை போட்டார்.

டொட்டன்ஹாமுடனான பரபரப்பான போட்டியை சமன் செய்தது ஆர்சனல்

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் முதல் பாதியில் பின்தங்கிய ஆர்சனல்…

தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் நோர்விச் அணியின் ஆதிக்கமே இருந்தது. இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே டீமு புக்கி அந்த அணிக்காக கோல் ஒன்றை பெற்று வலுவான முன்னிலை ஒன்றை பெற்றுக்கொடுத்தார். எனினும் ரொட்ரிகோ 88 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டிக்காக கோல் ஒன்றை பெற்றபோதும் அது அந்த அணியின் தோல்வியை தவிர்க்க போதுமாக இருக்கவில்லை.

எனினும் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் மன்செஸ்டர் சிட்டி கழகம் தொடர்ந்தும் இரண்டாவது இடத்திலேயே உள்ளது. 

லிவர்பூல் எதிர் நியூகாசில் யுனைடட்

Image Courtesy – AP

சாடியோ மானே மற்றும் மொஹமட் சலாஹ்வின் அபார கோல்கள் மூலம் நியூகாசில் யுனைடட் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற லிவர்பூர் அணி ப்ரீமியர் லீக்கில் தனது தொடர்ச்சியான வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.

அன்பீல்டில் நடைபெற்ற போட்டியில் வழக்கம்போல் மந்தமான ஆரம்பத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணி 7 ஆவது நமிடத்திலேயே பின்னடைவை பெற்றது. ஜெட்ரோ வில்லம்ஸ் நியூகாசில் அணிக்காக கோல் ஒன்றை பெற்றார்.

எனினும் முதல் பாதி முடிவதற்குள் 28 மற்றும் 40 ஆவது நிமிடங்களில் சாடியோ மானே கோல்கள் திருப்பியதன் மூலம் லிவர்பூல் அணியின் முன்னிலையுடன் முதல் பாதி முடிவடைந்தது. இரண்டாவது பாதியில் மொஹமட் சலாஹ் மற்றொரு கோலை புகுத்த லிவர்பூல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மன்செஸ்டர் யுனைடட் எதிர் லெய்செஸ்டர் சிட்டி

ஓல்ட் டிரபர்ட்டில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்திலேயே கிடைத்த பெனால்டியின் உதவியோடு லெய்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் அவசியமான வெற்றி ஒன்றை பெற்றது.

ஆரம்பப் போட்டியில் செல்சியிடம் 4-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்ற நிலையில் மன்செஸ்டர் யுனைடட் அணி கடைசியாக தமது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற தவறிய நிலையிலேயே லெய்செஸ்டர் சிட்டியை எதிர்கொண்டது.

போட்டியின் 8 ஆவது நிமிடத்திலேயே லெய்செஸ்டர் அணி பின்கள வீரர் கக்லர் சன்குவினால் தடுக்கி வீழ்த்தபட்டதை அடுத்து கிடைத்த பெனால்டியை மார்கஸ் ரஷ்போர்ட் கோலாக மாற்றினார்.

இலங்கை அணி சிறந்த நுட்பத்துடன் ஆடியது – யுங் ஜொங் சு

தமக்கு எதிராக இலங்கை கால்பந்து அணி வீரர்கள் சிறந்த நுட்பத்துடன் விளையாடியதனால்…

இரண்டாவது பாதியில் வைத்து ரஷ்போர்டுக்கு மற்றொரு வாய்ப்பு கிட்டியபோது 30 யார் தூரத்தில் இருந்து உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியால் பட்டும்படாமலும் சென்றது.

இந்த வெற்றியின் மூலம் மன்செஸ்டர் யுனைடட் அணி புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டதோடு, லெய்செஸ்டர் சிட்டி 5 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

செல்சி எதிர் வோல்வ்ஸ்

டெம்மி அப்ரஹாம் ஓன் கோல் ஒன்றை எதிரணிக்கு வழங்கியபோதும் அவரது அபார ஹெட்ரிக் கோலுடன் வோல்வ்ஸ் அணியுடனான போட்டியில் செல்சி கழகம் 5-2 என்ற கோல்கள் வித்தியாசலத்தில் உறுதியான வெற்றி ஒன்றை பெற்றது.

இங்கிலாந்து தேசிய அணியின் முன்கள வீரரான டெம்மி அப்ரஹாம் முதல் பாதி ஆட்டத்தில் ஏழு நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களை புகுத்தியதோடு, 21 வயது பிகாயோ டொமோரி 25 யார் தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்த முதல் பாதியில் செல்சி அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அப்ரஹாம் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே தனது ஹெட்ரிக் கோலை புகுத்த செல்சியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இந்நிலையில் டொம்மி அப்ரஹாம் தவறுதலாக பெற்ற ஓன் கோலே வோல்வ்ஸ் அணியின் முதல் கோலாக இருந்தது. கடைசி நிமிடங்களில் கட்ரோன் அந்த அணிக்காக மற்றொரு கோலை பெற போட்டி முடியும் தருவாயில் செல்சி சார்பில் ஐந்தாவது கோலை மேசன் மௌண்ட் (Mason Mount) பெற்றார்.

இதுவரை ஒரு வெற்றி கூட பெற்றிராத வோல்வ்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசிக்கு முந்திய இடத்தில் இருப்பதோடு செல்சி கழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.

இதனிடையே ப்ரிமியர் லீக் தொடரில் நேற்று (14) நடைபெற்ற மற்றொரு முக்கிய போட்டியில் ஸ்புர்ஸ் தனது சொந்த மைதானத்தில் கிறிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிராக 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க