சதத்தினை நழுவ விட்டார் ஜஹ்மர் ஹெமில்டன் : மேற்கிந்திய தீவுகள் A அணி பலமான நிலையில்

4166
Sri Lanka A vs West Indies A

பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான நான்கு நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் A அணி வலுவான நிலையில் உள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வமற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகளின் A அணியினர் பங்குகொள்ளும் நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று கண்டிபல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தார்.

சமீபத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கைஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணியினை  வைட்வொஷ் செய்து தொடரை கைப்பற்ற உதவிய 18 வயதேயான துடுப்பாட்ட வீரர் அவிஸ்க பெர்னாந்துவின் முதலாவது முதல் தர போட்டியாக இன்றைய போட்டி அமைந்தது.

போட்டியில் முதல் துடுப்பாட்டத்தை ராஜேந்திர சந்திரிக்கா, கெய்ரோன் பவல் உடன் ஆரம்பம் செய்த மேற்கிந்திய தீவுகளின் A  அணியினர் 52 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் வேகப்பந்து வீச்சாளர் அனுக் பெர்னாந்துவின் பந்தில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து அவ்வணி தனது முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தது. இதனால் 29 ஓட்டங்களை பெற்றிருந்த கெய்ரோன் பவல் அரங்கு திரும்பினார்.

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக சிம்ரோன் ஹெட்மைர் மைதானம் வந்து விளையாடிக்கொண்டிருந்த நிலையில் அவருடன் துடுப்பெடுத்தாடிய  ராஜேந்திர சந்திரிக்கா உபாதை காரணமாக 51 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மைதானத்தை விட்டு  வெளியேறினார். அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி 120 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சுதேஷ் குமார வீசிய பந்தில் தனது இரண்டாவது விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன் பின்னர் களத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் சாமர் புரூக்ஸ்  3 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

மூன்றாவது விக்கெட்டுக்கும் பெரிதான  இணைப்பாட்டம் ஒன்று பெறப்படாத நிலையில், சரிவுப் பாதையில் செல்ல இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த விஷாஉல் சிங் மற்றும் ஜஹ்மர் ஹமில்டன் ஆகியோர் நிதமான துடுப்பாட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி, இருவரும் 188 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை நல்ல நிலைக்கு இட்டுச்சென்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் இலங்கை அணியினை நெருக்கடிக்கும் உள்ளாக்கினர்.

இதன்போது 15 பவுண்டரிகளுடன் 99 ஓட்டங்களை பெற்றிருந்த  ஜஹ்மர் ஹமில்டன் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அசலன்க வீசிய பந்தில் தனது சதத்தை பூர்த்தி செய்ய முயற்சித்த போது சுதேஷ் குமாரவினால் ரன்அவுட் செய்யப்பட்டு துரதிர்ஷ்டவசமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய விஷாஉல் சிங் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகள் உள்ளடங்களாக 81  ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் இன்று பெரிதாக பிரகாசிக்கவில்லை. சுதேஷ் குமார, அனுக் பெர்னாந்து, சரித் அசலன்க மற்றும் அணித் தலைவர் திமுத்  கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை பெற்றனர். இன்றைய ஆட்ட நேர முடிவின் போது மேற்கிந்திய தீவுகள் A  அணியினர் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A அணி – 331/5 (89.4) – ஜஹ்மர் ஹமில்டன் 99, விஷாஉல் சிங் 81*, திமுத் கருணாரத்ன 0/1, அனுக் பெர்னாந்து 55/1